இலக்குடன் வாழ்க்கையில் பயணிப்போம்! டான்ஶ்ரீ கேவியஸ் தீபாவளி செய்தி

சமூகம்
Typography

 

கோலாலம்பூர்,அக்.16- இவ்வுலகம் நம்மை ஏதோ ஒரு பயணத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது என்று எண்ணி, நாமும் பயணிப்பதை விட, அந்த வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இலக்கு வைத்து பயணிக்க நாம் தயார் நிலையில் இருப்பதே சிறப்பு என மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம். கேவியஸ் தமது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார். 

வாழ்க்கை என்பது ஒரே இடத்தில் நின்று கொண்டு 360 பாகையில் சுற்றிப் பார்ப்பது இல்லை. அடுத்தக் கட்டத்தை நோக்கிப் பயணிப்பதே வாழ்க்கை ஆகும். நமக்குள் நாமே ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டு, இப்படித்தான் வாழ்வேன் என்று அடம் பிடிப்பவர்களுக்கும், வாழ்க்கை என்பது அனைத்தையும் கடந்து செல்வது என்று எண்ணி, சந்திக்கும் சவால்களைத் தவிடு பொடியாக்கிப் பயணிப்பவர்களுக்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன.

உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ள வளர்ச்சியைப் பார்த்துக் கொண்டே, மலேசியாவும் வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சியில் மலேசியர்களாகிய நாம், அந்த வளர்ச்சி தொடர்பான விழிப்புணர்வைக் கொண்டிருக்க வேண்டும். வளரும் நம்மை இழுத்துப் பிடித்து கீழே தள்ளும் கூட்டத்தை இனியும் நம்பாமல், வெற்றிச் சிகரத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்குங்கள். 

மனித சமுதாயத்தில் தீவிரவாதம், கொடுங்கோன்மை, அகங்காரம், ஆணவம் அழிக்கப்பட்டு அமைதி, சமாதானம் உருவானதை நினைவுறுத்தும் நன்னாள்தான் இது என்று கூறப்படுகிறது. புத்தாடை அணிந்து குடும்ப உறவினர்கள், நண்பர்களோடு கூடி விருந்துண்டு குழந்தைச் செல்வங்களோடு பட்டாசு, மத்தாப்பு கொளுத்தி சிரித்து மகிழும் பொன்னாள் இது.

இந்த நன்னாளில் நாடெங்கும் சமூகவிரோதச் செயல்கள் ஒழிந்து மக்கள் மத்தியில் வறுமை, வன்முறை மறைந்து மத நல்லிணக்கம் மேம்பட்டு மகிழ்ச்சியும், அனைத்துப் பொருளாதார வளர்ச்சியும் காண ஒற்றுமை உணர்வோடு உழைப்போம் என்று உறுதி எடுப்போம்.  என்று டான்ஶ்ரீ கேவியஸ் தெரிவித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS