சமயப் பள்ளிக்கு தீ: 7 சந்தேக பேர்வழிகளும் மூன்று வெவ்வேறு சிறைக் கூடங்களில்!

சமூகம்
Typography

கோலாலாம்பூர், செப்.23- கம்போங் டத்தோ கிராமட் சமயப் பள்ளியில் நடந்த கோரத் தீ வைப்புச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 சந்தேகப் பேர்வழிகளும் 3 வெவ்வேறு சிறைக்கூடங்களில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர்களின் வழக்கறிஞர் இக்மார் ஷபிக் முகமட் அஸ்மி கூறினார்.

சுமார் 11 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட அந்த எழுவருக்கும் இப்போதைக்கு தங்கள் குடும்பத்தினரைப் பார்க்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். 

அவர்கள் தங்கள் குடும்பத்தினரைப் பார்க்க, தங்களாலான முயற்சிகளை தாங்கள் மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். சமயப்பள்ளியில் படித்து வந்த 21 மாணவர்கள் 2 ஆசிரியர்களின் உயிரைப் பறித்த இந்தத் துயரச் சம்பவத்தில் கைதான எழுவருக்கும் தடுப்புக் காவல் நேற்று நிறைவடைந்தது.

இதனிடையே அவர்களது தடுப்புக் காவலை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க மாஜிஸ்திரேட் ஸுகாய்ர் ரோஸ்லி உத்தரவிட்டார். அவர்களின் தடுப்புக் காவல் வரும் செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கோலாலம்பூர் குற்றப்புலனாய்வுத் தலைவர் ருஸ்டி முகமட் இசா உறுதிப்படுத்தினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS