சிறுவன் கடத்தல்: போலீஸ் அதிரடி! 12 பேர் கைது! பிணைப் பணம் மீட்பு!

சமூகம்
Typography

ஈப்போ செப்.20- தைப்பிங்கிலிருந்து கடத்தப்பட்ட 17 வயதுச் சிறுவனை போலீசார் மீட்டிருப்பதோடு இது தொடர்பாக பினாங்கு முதல் ஜொகூர்பாரு வரையில் பல சந்தேகப் பேர்வழிகளையும் கைது செய்துள்ளனர். 

கடத்தப்பட்ட சிறுவனுடன் இருந்த இரண்டு சந்தேகப் பேர்வழிகள் போலீசாரிடம் சிக்கினர். மேலும்,10 சந்தேகப் பேர்வழிகளும் கைதாகியுள்ளனர் என்று பேரா மாநில போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஹஸ்னான் ஹசான் தெரிவித்தார். இந்தச் சிறுவன் செப்டம்பர் 2-ஆம் தேதி கடத்தப்பட்டான். அடுத்த மூன்றாவது நாள், அதாவது செப்டம்பர் 5-ஆம் தேதி அந்தச் சிறுவனைப் பினாங்கில் போலீசார் மீட்டனர். 

பட்டர்வொர்த்தில் 2 சந்தேகப் பேர்வழிகளும் ஜொகூர் பாருவில் 8 சந்தேகப் பேர்வழிகளும் பிடிப்பட்டனர். தொடக்கத்தில், கடத்தல்காரர்கள் 30 லட்சம் ரிங்கிட் பிணைப்பணம் கோரினார். பணம் தராவிடில் அந்தச் சிறுவனைக் கொன்று விடப்போவதாக மிரட்டினர். 

கடத்தல்காரர்களுடன் அந்தச் சிறுவனின் தந்தை பலமுறை பேரம் பேசி 3 லட்சம் ரிங்கிட் பிணைப் பணம் தருவதற்கு சம்மதம் பெற்றார். செப்டம்பர் 5-ஆம் தேதி ஜொகூர் பாருவில் சம்பந்தப்பட்ட கடத்தல்காரர்களிடம் பிணைப்பணம் ஒப்படைக்கப்பட்டது. 

இதனை அடுத்து பல்வேறு முனைகளில் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிய போலீசார், பினாங்கில் சிறுவனை மீட்டதோடு, அவனுடன் இருந்த 2 சந்தேகப் பேர்வழிகளையும் கைது செய்தனர். பட்டர்வொர்த் மற்றும் ஜொகூர்பாருவில் இதர 10 பேரைப் பிடித்தனர். 

இவர்கள் 17 வயதுக்கும் 36 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். இவர்களிடமிருந்து 1 லட்சத்து 75 ஆயிரத்து 400 ரிங்கிட் ரொக்கம் மீட்கப்பட்டது. மேலும் மைவி, டோயோட்டா வியோஸ் மற்றும் யமாஹா எல்சி மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.

எட்டு கைத் தொலைப்பேசிகள், சிம் கார்டுகள், முகமூடிகள், கார்ச் சாவிகள் ஆகியவை மீட்கப்பட்டன. இவர்களில் ஐவர் போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில் இதர 7 பேரின் நிலைகுறித்து பிராசிகியூட்டர் தரப்பு விரைவில் முடிவெடுக்கும்.         

 

BLOG COMMENTS POWERED BY DISQUS