'என் நீண்ட நாள் கனவு நிறைவேறிவிட்டது!' லுக்குமியா சிறுவனின் மனம் நெகிழ்ந்த தருணம்!

சமூகம்
Typography

கோத்தாகினாபாலு, செப்.13- புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு அவதியுற்றுவரும் 13 வயதுச் சிறுவனின் நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறியது. தான் ஒரு தீயணைப்பு வீரராக பணிபுரிய வேண்டும் என்பதுதான் முகம்மட் ஃபைசல் இமாம் என்ற 13 வயது சிறுவனின் ஆசை. அந்த ஆசையை தீயணைப்புத் துறை நிறைவேற்றி வைத்தது.

லுக்குமியா எனப்படும் புற்றுநோயில் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவன் ஃபைசல், சக்கர நாற்காலியில் மட்டும் தான் பயணம் செய்யக்கூடிய நிலையில் உள்ளார்.

இன்று தீயணைப்புத் துறைக்கு வருகை புரிவதற்காக அவருக்கு வாய்ப்புத் தரப்பட்டிருந்த நிலையில், நேற்றிலிருந்தே மிகுந்த உற்சாகத்துடன் ஃபைசல் காணப்பட்டார். இரவு அவருக்கு தூக்கமே பிடிக்கவில்லை. எப்போது விடியும் என்று காத்திருந்தார். இன்று காலையில் வழக்கத்திற்கு மாறாக இரண்டு மணிநேரத்திற்கு முன்பே எழுந்து விட்டார்.

லிக்காஸ் மருத்துவமனையில், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனையின் தீயணைப்புத் துறைக்கு அவர் வருகை புரிந்தார். தீயணைப்பு வீரராக ஆகும் அவரது கனவை நிறைவேற்றும் வகையில் அவருக்குத் தீயணைப்பு வீரர்களுக்கான சீருடை அணிவிக்கப்பட்டது. 

பின்னர் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே தீயணைப்பு வாகனங்களின் செயல்பாடுகள் உள்பட பல்வேறு அம்சங்கள் அவருக்கு விளக்கப்பட்டது. அப்பகுதி முழுவதும் சுற்றிக் காட்டப்பட்டது. அவரது இந்தக் கனவுப் பயணத்திற்கு சபா தீயணைப்புத் துறையும் சிறார் கனவுகள் மீதான இயக்கமும் ஏற்பாடு செய்தது.

தற்போது ஃபைசல் புற்றுநோய்க்கான கிமோத்தெரெபி சிகிச்சையைப் பெற்று வருகிறார். ஆறு வயது முதற்கொண்டே அவருக்கு இந்தப் பிரச்சனை இருந்து வருகிறது. தொடர்ந்து மருத்துவமனை மற்றும் வீடு என்றே அவரது காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. நிலைமை மோசமடையும் போதெல்லாம் அவர் மருத்துவமனைக்கு வந்து விடுவார்.

இருந்த போதிலும், தன்னால் முடிந்தவரை எல்லா செயல்பாடுகளிலும் சுறுசுறுப்பாக இருப்பதையே ஃபைசல் விரும்புவார். முடிந்தவரை பள்ளிக்கூடத்திற்கும் சென்று வருவார்.

இன்று தீயணைப்பு வீரர்களின் சீருடையில் மிகுந்த வீரத்துடனும் தைரியத்துடனும் காணப்பட்ட அவர், தன்னுடைய இந்த ஆசையை நிறைவு செய்வதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மேலும், அவருக்கு இன்ப அதிர்ச்சியை வழங்கும் வகையில் அவருடைய பிறந்த நாளை, தீயணைப்பு வீரர்கள் அவருடன் சேர்ந்து கொண்டாடினர். இதில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

"படிப்பதில் என் தம்பிக்கு ஆர்வம் அதிகம். ரொம்பவும் புத்திசாலி. ஆனால், கிமோத்தெரபி செய்து கொள்வதால் அவரால் அதிகமான பாடங்களை நினைவில் வைத்துக் கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது என்று ஃபைசலின் சகோதரி ஃபாரா லைனா தெரிவித்தார்.

அவர் இன்றைக்கு சற்று பலவீனமாக உள்ளார். குரல் கூட மங்கிவிட்டது. இருந்தாலும் தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து இருந்ததில் மிகவும் மகிந்து போனார் என்று ஃபாரா லைனா சொன்னார்.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS