கோலாலம்பூர், ஜூலை.17- மலேசிய பயணிகள் விமானம் எம்.எச்-17 சுட்டு வீழ்த்தப்பட்ட துயரச் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களைத் தண்டிக்க மலேசியா தீர்க்கமாக முடிவுடன் செயல்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ லியோவ் தியோங் லாய் கூறினார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி, எம்.எச் 17 விமானம் கிழக்கு உக்ரைன் வான் எல்லைக்குட்பட்டப் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டு மூன்று ஆண்டு நிறைவை முன்னிட்டு விடுத்த அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் அவ்விமானத்தில் பயணம் செய்த 298 பயணிகளும் விமானப் பணியாளர்களும் பலியாகினர். இவர்களில் நெதர்லாந்து, மலேசியா, ஆஸ்திரேலியா, இந்தோனிசியா, பிரிட்டன், பெல்ஜியம், ஜெர்மனி, பிலிப்பினா, கனடா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் பிரஜைகள் அடங்குவர்.
கூட்டு புலன் விசாரணைக் குழுவுடன் மலேசிய அரசாங்கம் இணைந்து மனிதாபிமானமற்ற இந்தச் சதிச் செயலுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன்நிறுத்த முழுக் கடப்பாட்டுடன் செயல்படும் என்று அவர் தெரிவித்தார்.
அந்த வகையில், இந்தச் சதிச் செயலுக்கு எதிராக தேசிய விசாரணை நடத்தும் நெதர்லாந்தின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். அனைத்துலக தரத்திலான விசாரணையாக இது அமையவிருக்கிறது. இந்த விசாரணையை ஓர் உரிய காலத்தில் நடத்துவதற்காக டச்சு அரசு விசாரணை துறை முடிவெடுத்திருப்பது வரவேற்கத்தாகும் என்று லியோ தியோங் லாய் சுட்டிக்காட்டினார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுடைய உற்றார் உறவினர்களின் வலியையும் வேதனையையும் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. மூன்று வருடங்கள் கடந்து விட்டாலும், இவ்விபத்தில் பலியான பயணிகள் மற்றும் பணியாளர்களின் நினைவு என்றும் நீங்காமல் நிலைத்து நிற்கும் என அவர் கூறினார்.
எம்.எச்.17 விமானத்தை வீழ்த்தியவர்களை தண்டிக்க மலேசியா உறுதி!
Typography
- Font Size
- Default
- Reading Mode