கோலாலம்பூர், பிப்.27- மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டுள்ள சவூதி அரேபிய மன்னர் கிங் சல்மான் அப்துலசிஸுடன் பிரதமர் நஜிப் துன் ரசாக் 'செல்ஃபி' எடுத்துள்ளார். அதனைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் பிரதமர்.

நாட்டு பிரதமர் உலக தலைவர்களுடன் செல்ஃபி எடுப்பது வழக்கம். 'அரசு தந்திர' உறவுகளின் வலிமையை இது உணர்த்துவதாக நெட்டிசன்கள் கூறுவதும் உண்டு. தற்போது மலேசியாவில் இருக்கும் கிங் சல்மானுடன் காரில் செல்ஃபி எடுத்துள்ள பிரதமர் அதனைப் பெருமையோடு பதிவேற்றம் செய்துள்ளார்.

அதோடு, "இரு புனித மசூதிகளின் காவல் நாயகர், கிங் சல்மானுடன் என்னுடைய செல்ஃபி. இது நெருங்கிய நட்பு" எனவும் பதிவேற்றம் செய்துள்ளார். 

இதற்கு முன்னர் பிரதமர் நஜிப், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனும் முகநூல் நிறுவனர் மார்க் ஷூக்கெர்பர்கருடனும் நஜிப் எடுத்த செல்ஃபி பிரபலமானதாகும்.

ஈப்போ, பிப்.27- பெங்கலான் உலுவிலுள்ள செம்பனைத் தோட்டம் ஒன்றில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த போது மீட்கப்பட்ட 18 பேர் நான்கு சமூக பராமரிப்பு இல்லங்களில் தற்போது தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான தற்காலிக பாதுகாப்பு பராமரிப்பு உத்தரவின் பேரில் பிப்ரவரி 27ஆம் தேதியிலிருந்து மார்ச் மாதம் 9ஆம் தேதிவரை அவர்கள் இந்த இல்லங்களில் இருந்து வருவர் என்று பேரா குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் டத்தோ கான் தியன் கீ தெரிவித்தார்.

Rumah Perlindungan Kanak-Kanak Perempuan (Rembau, Negri Sembilan), Rumah Perlindungan Dewasa Perempuan, (Subang Jaya, Selangor), Rumah Perlindungan Kanak-Kanak Lelaki, (Johor) Rumah Perlindungan Lelaki Dewasa, (Tanjung Keling, Malacca) ஆகிய சமூக இல்லங்களில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

நெகிரி செம்பிலான், பகாவிலிருந்து 900 ரிங்கிட் சம்பளத்துடன், தங்குவதற்கு வசதியான இடமும் தருவதாக, ஏமாற்றி அழைத்து வரப்பட்ட 18 பேர், பேராக், பெங்கலான் உலுவில், கம்போங் தாசெக், பெலுக்கார் செமாங் செம்பனைத் தோட்டத்தில் கிட்டத்தட்ட கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பெங்கலான் உலு, கம்போங் தாசேக்கில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் ஆட்கடத்தல் மற்றும், தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் சட்டவிரோத நடவடிக்கைகள் நிகழ்வதாக, தகவல் அறிந்த ஒருவர் புகார் செய்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 5 குழந்தைகள் உட்பட 18 பேரை மீட்டனர். 

மீட்கப்பட்ட 18 பேரில், ஐவர் ஆண்கள், 6 பெண்கள், 13 முதல் 17 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்கள், மற்றும் 2 முதல் 12 வயது வரையிலான ஐந்து சிறுவர்கள் உள்ளனர்.

பெரும்பாலும் பகாவிலிருந்து கொண்டு வரப்பட்ட இவர்கள், கடந்த 6 மாதம் முதல் 2 வருடங்கள் வரை இங்கு வேலை செய்துள்ளனர்.இவர்கல் பல்வேறு அடித்துத் துன்புறுத்தி வேலை வாங்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது.

இவர்களை கொடுமைப்படுத்தி வேலை வாங்கி வந்ததாக கருதப்பட்ட ஒரு தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விசாரணைக்காக மார்ச் 3ஆம் தேதிவரை வைக்கப்பட்டிருப்பர்.

கோலாலம்பூர், பிப்.27- நியூசிலாந்தில் தனது மேற்படிப்பைப் பயின்று வந்த மலேசிய மாணவர் ஒருவர் ஏரியில் மூழ்கி மரணமடைந்தார். இச்சம்பவம் ஹமில்டன் நகரிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கராபிரோ ஏரியில் நடந்தது.

வைகாதோ பல்கலைக்கழகத்தில் பயின்ற, 21 வயதான அப்துல் அம்ஷார் அஷிம் என்பரே இச்சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்ததாக வெளியுறவு அமைச்சு கூறியது. நேற்று மாலை 3.30 மணியளவில் தனது நண்பர்களுடன் அம்மாணவர் ஏரியில் நீச்சல் அடித்து கொண்டிருந்தார். அவருடன் இருந்த மற்ற மாணவர்கள் குளத்தில் இறங்காது கரையில் இருந்து கொண்டே வேடிக்கைப் பார்த்துள்ளனர். 

நீச்சல் அடித்து கொண்டிருந்த அம்மாணவர் திடீரென காணாமல் போனதாக அவரின் நண்பர்கள் கூறியதாக உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர். அம்ஷார் காணாமல் போனதைக் கண்ட அவரின் நண்பர்கள் உடனடியாக போலீசாரைத் தொடர்பு கொண்டனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் தண்ணீரில் ஓடும் மோட்டார் சைக்கிள் கொண்டு தேடலில் ஈடுப்பட்டனர். இருப்பினும் மாணவரைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை. பின்னர், மீட்பு படையினர் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணியை மேற்கொண்டனர்.  

ஒருநாள் முழுதும் தேடி கிடைக்காத நிலையில், இன்று நண்பகலில் காணாமல் போன இடத்திலிருந்து சிறிது தூரம் தள்ளி, இறந்த நிலையில் மீட்கப்பட்டார். 

 கோலாலம்பூர், பிப்.27- நச்சுத் தன்மை கொண்ட இரசாயனத் தாக்குதல்கள் மூலம் விமானநிலையத்தில் கொல்லப்பட்ட கிம் ஜோங் நாமிற்கு, சிகிச்சை அளித்த மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் மருத்துவ ரீதியில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.

உணர்வு நரம்புகளைப் பாதிக்கக்கூடிய இந்த இரசாயனத்தினால் மருத்துவ ஊழியர்கள் எவரும் இதுவரை பாதிக்கப்பட்டவில்லை. அதற்கான அறுகுறிகள் எதுவும் தென்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சில பாதிப்புகள் சற்று கால தாமதமாக வெளிப்படுமா? என்பதை கண்டறிவதற்காக கிம் ஜோங் நாமிற்குச் சிகிச்சை அளித்த மருத்துவ ஊழியர்கள் அனைவரும் அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் என சுகாதார அமைச்சர் கூறியிருக்கிறார்.

அதேவேளையில், விஷத் தாக்குதலுக்கு உள்ளான கிம் ஜோங் நாம், சம்பவம் நடந்து முடிந்த 20 நிமிடங்களுக்குள் மரணமடைந்து விட்டார். துரிதமாக உயிரைப் பறிக்கக்கூடிய வகையில் வி.எக்ஸ் எனப்படும் அந்த இரசாயனத்தின் அளவு கூடுதலாக இருந்தே இதற்குக் காரணம் என்ற தகவலையும் அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்திருக்கிறார்.

More Articles ...