கேள்வி கேட்டால், கன்னத்தில் அறைவதா?! என் ஆட்சியின் போது அப்படியில்லை -மகாதீர்

அரசியல்
Typography

கோலாலம்பூர், மே.19- "என்னுடைய ஆட்சி காலத்தில் கேள்வி கேட்டதற்காக யாரும் கன்னத்தில் அறையப்படவில்லை என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறியிருக்கிறார்.

அண்மையில் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் முன்னிலையில் திரைப்பட இயக்குனர் ஒருவர், காமெடி நடிகரால் கன்னத்தில் அறையப்பட்ட சம்பவம் தொட்டுப் பேசிய துன் மகாதீர், கருத்துச் சொல்லும் சுதந்திரம் எந்த அளவுக்கு கட்டுப்படுத்தப் பட்டுள்ளது என்பதையே இது சித்தரிக்கிறது என்று சுட்டிக்காட்டினார்.

டத்தோஶ்ரீ நஜிப்பிடம் கேள்வி எழுப்புகிறவர்கள் இப்படிப்பட்ட தொல்லைகளுக்குத் தான் ஆளாக நேரும் என்று அவர் சாடினார்.

அண்மையில் டி.என்.-50 கலந்துரையாடல் நடத்தப்பட்ட போது பிரதமர் நஜிப்பிடம் கேள்வி கேட்க திரைப்பட இயக்குனரான டேவிட் தியோ   முயன்ற வேளையில் ஒரு காமெடி நடிகரான மாட் ஓவர் என்பவர் பாய்ந்து வந்து டேவிட் தியோவை கன்னத்தில் அறைந்தார்.

பிரதமர் முன்னிலையில் இந்தச் சம்பவம் நடந்தது. பிரதமர் முன்னலையில் முறையாக நடந்து கொள்ளாததால் கன்னத்தில் அறைந்ததாக அந்த நடிகர் கூறிக்கொண்டார்.

இது குறித்து கருத்துரைத்த துன் மகாதீர், "என்னுடைய ஆட்சி காலத்தில், எனக்கு முன்பு பிரதமர்களாக இருந்தவர்களின் ஆட்சி காலத்தில் இது போன்ற சம்பவம் ஒருபோதும் நடந்ததே இல்லை என்று கூறினார். 

கேள்வி கேட்க ஒரு வாய்ப்பைத் தந்து விட்டு கேள்வி கேட்டால் கன்னத்தில் அறை விழுகிறது. இது நஜிப் ஆட்சியில்தான் நடக்கும் என்றார் அவர்.

சமூக வலைத்தளவாசிகளின் நேரடிக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட போது கன்னத்தில் அறையப்பட்ட சம்பவம் குறித்து ஒருவர் எழுப்பிய கேள்விக்கு துன் மகாதீர் மேற்கண்டவாறு சொன்னார்.

தம்முடைய ஆட்சி காலத்தில் எதிர்ப்புக் கருத்துகளைச் சகித்துக் கொள்ளாதவர் மகாதீர் என்ற விமர்சனம் பரவலாக நிலவியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS