ஜாகிரின் பிஆர் தகுதி: மறு ஆய்வு செய்க! தே.மு. தலைவர்கள் கோரிக்கை!

அரசியல்
Typography

 கோலாலம்பூர், ஏப்ரல்.21- சர்ச்சைக்குரிய இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக்கிற்கு நிரந்தரக் குடியிருப்பு அந்தஸ்து (பிஆர்) வழங்கி இருப்பதை மறுபரிசீலனை செய்யும்படி தேசிய முன்னணியைச் சார்ந்த பல்வேறு தலைவர்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜாகிரின் பிஆர் தகுதி குறித்து அரசாங்கம் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று மஇகா தேசியத் துணைத் தலைவர்  எஸ்.கே.தேவமணி கோரிக்கை விடுத்தார். 

அவர் மலேசியாவுக்கும் நமது சமுதாயத்திற்கும் பொருத்தமில்லாதவர். நாம் காலம் காலமாக கட்டிக்காத்த அமைதிக்கு அவர் பாதகத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்று துணையமைச்சருமான தேவமணி வலியுறுத்தினார்.

மலேசியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டிற்கு ஜாகிர் போன்றவர்கள் மிக ஆபத்தானவர்களாக இருப்பர் என்று தேசிய முன்னணி தலைவர்களில் ஒருவரான ஜேம்ஸ் மாசிங் தெரிவித்தார்.

பல இன மற்றும் பல சமயங்களைக் கொண்ட மலேசியாவில் ஜாகிர் போன்றவர்களுக்கு நிரந்தர வசிப்பிடத்தை தருவது மிக ஆபத்தானது. எனவே, இது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பார்ட்டி ரயாட் சரவா கட்சியின் தலைவரான ஜேம்ஸ் மாசிங் கேட்டுக்கொண்டார்.

ஒருவர், மற்றொருவரின் சமய நம்பிக்கைகளை மதிக்கின்ற காரணத்தால்தான் நாம் அமைதியாக வாழ்கிறோம். நாம் பிறருடைய சமயத்தைக் குறைகூறுவது இல்லை என்று 'மலேசியன் இன்சைட்' இணையச் செய்திக்கு அளித்த பேட்டியில் ஜேம்ஸ் மாசிங் கூறியுள்ளார்.

ஜாகிர் நாயக் அண்மையில் தம்முடைய பேட்டி ஒன்றில் கீழ்கண்டவாறு கூறிருப்பதாக தெரிய வருகிறது. அதாவது, "அவர்களின் சமயம் தவறானது, அவர்களின் வழிபாடு தவறானது என்கிற போது எதற்காக நாம் இதை (இஸ்லாமிய நாட்டில் கோயில்கள், தேவாலயங்கள் கட்டுவதை) அனுமதிக்க வேண்டும்" என்று ஜாகிர் கூறியிருக்கிறார்.

அண்மையில் மலாய்வாத அமைப்பான பெர்க்காசா அமைப்பு, ஜாகிரை பெருமைப்படுத்திக் காட்டுவதில் ஈடுபட்டதை மசீச தலைவர்களில் ஒருவரான செனட்டர் சோங் சின் வூன் சாடினார். பெர்க்காசா அமைப்பு ஜாகிருக்கு வீரவிருது வழங்கியதை அவர் சுட்டிக்காட்டினார்.

முஸ்லிம் அல்லாதவர்களையும் இதர சமயங்களையும் இழிவு படுத்தும் வகையில் ஜாகிரின் கருத்து அமைந்திருக்கும் நிலையில், அவருக்கு பெர்க்காசா விழா எடுக்கிறது. அவரைப் பெரிய ஹீரோ போல காட்ட முயற்சிக்கக் கூடாது. இந்நாட்டிலுள்ள இன மற்றும் சமய பிரச்சனைகள் குறித்த தெளிவு நம்மிடம் இருக்கிறது என்று துணைக்கல்வி அமைச்சருமான சோங் சின் வூன் குறிப்பிட்டார்.

முஸ்லிம் அல்லாதவர்களை அவதூறு செய்யும் வகையில் அவர் தொடர்ந்து பேசி வருவாரேயானால், அவரது பிஆர் அந்தஸ்தை மறு பரிசீலனை செய்யவேன்டியது அவசியம் என்று மசீச இளைஞர் தலைவருமான சோங் சின் வூன் கூறினார். 

பல்லாயிரக் கணக்கனான இந்தியர்கள் குடியுரிமை இல்லாமல் இங்கு அவதியுற்றுக் கொண்டிருக்கும் போது சர்ச்சைக்குரிய ஜாகிருக்கு பிஆர் அந்தஸ்து வழங்குவதா? என ஹிண்ட்ராப் இயக்கத்தின் தலைவரான வேதமூர்த்தி கேள்வி எழுப்பினார். 

தங்களின் வாழ்நாள் முழுவதையும் இங்கே கழித்து வரும் பல்லாயிரக் கணக்கானோரின் குடியுரிமை பிரச்சனைக்குத் தீர்வு காணுவதற்கு தாம் பிரதமர் துறையில் துணையமைச்சராக இருந்த போது வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

பிஆர் தகுதிக்கு விண்ணப்பம் செய்வோருக்கென்று பல தகுதிகள்  உள்ளன. அந்த வகையில் ஒருவர், பூர்வீக எந்த நாடோ, அந்த நாட்டில் நன்னடத்தைகளுக்கான பதிவையும் கொண்டிருக்க வேண்டும்.. எனவே இத்தகைய தகுதிகள் ஜாகிருக்கு இருக்கின்றனவா? என்ற வகையில்  வேதமூர்த்தி கேள்வி எழுப்பினார்.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS