ஜாகிரின் 'PR' அந்தஸ்தை ரத்தாக்க சுப்ரா என்ன செய்யப்போகிறார்? - குலா கேள்வி

அரசியல்
Typography

 ஈப்போ, ஏப்ரல்.20- சர்ச்சைக்குரிய இஸ்லாமிய சமயப் போதகர் ஜாகிர் நாயக்கிற்கு தரப்பட்டுள்ள நிரந்தர வசிப்பிட அந்தஸ்தை (PR status) ரத்து செய்வதற்கான அரசியல் விருப்பு, மலேசியா அரசாங்கத்திற்கு இருக்கிறதா? என்று ஈப்போ பாராட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பின்ரான எம்.குலசேகரன் கேள்வி எழுப்பினார்.

நேற்று கோலாலம்பூரில் நடந்த இந்திய இளைஞர்களுக்கான 2050-தேசிய உருமாற்றத்திட்ட கருத்தரங்கின் போது இளைஞர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்திருக்கும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ சுப்ரமணியம், ஜாகிர் நாயக்கிற்கு மலேசியாவில் இடம் கிடையாது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

எதற்காக ஜாகிர் நாயக்கிற்கு அரசாங்கம் நிரந்தர வசிப்பிட உரிமையை அளித்திருக்கிறது? என்று இளைஞர் ஒருவர் கேள்வி எழுப்பிபோது அதற்கு டத்தோஶ்ரீ சுப்ரா மேற்கண்டவாறு பதிலளித்து இருக்கிறார்.

இந்நாட்டில் இஸ்லாத்தின் முன்னேற்றத்திற்கு அவர் எத்தகைய பங்கினையும் அளிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

என்னைப் பொறுத்தவரை சுப்ராவின் இந்த விளக்கம் திருப்திகரமானதாக இல்லை. ஜாகிர் நாயக்கிற்கு தரப்பட்டுள்ள நிரந்த வசிப்பிட அந்தஸ்து விவகாரத்தில், சுப்ராவோ, மஇகாவோ அல்லது அரசாங்கமோ என்ன செய்யப்போகிறது என்பது பற்றித் திட்டவட்டமாகச் சொல்லவில்லை என்று ஜசெகவின் தேசிய உதவித் தலைவருமான குலசேகரன் தெரிவித்தார்.

மக்களும் இந்திய சமுதாயமும் விரும்புவது, உடனடி நடவடிக்கைகளைத் தானே தவிர, வெறும் வார்த்தைகளையோ, விளக்கங்களையோ அல்ல என்பது சுப்ராவுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்றார் அவர்.

இது தொடர்பாக விடுத்துள்ள பத்திரிகை அறிக்கை ஒன்றில் தாம் சுப்ராவுக்காக மூன்று கேள்விகளை முன்வைப்பதாக குலசேகரன் சொன்னார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

1) பல்லாயிரக் கணக்கான நாடற்றவர்களுக்கும் சிவப்பு அடையாளக்கார்டு வைத்திருப்பவர்களும் நிரந்தர வசிப்பிட அந்தஸ்தும் அதனைத் தொடர்ந்து குடியுரிமை பெறும் வாய்ப்பும் மறுக்கப்பட்டிருக்கும் நிலையில் ஜாகிர் நாயக்கிற்கு மட்டும் ஏன் அத்தகைய சலுகை வழங்கப் பட்டிருக்கிறது?

2) ஜாகிருக்கு இத்தகைய அந்தஸ்து அளிக்கப்பட்டிருப்பது தொடர்பில் பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் மஇகா தனது அதிருப்தியை தெரிவித்திருக்கிறதா?

3) அமைச்சரவையில் இந்தப் பிரச்சனையைக் கிளப்பி, ஜாகிர் நாயக்கின் நிரந்தர வசிப்பிட அந்தஸ்தை ரத்து செய்யும் கோரிக்கை விடுப்பாரா?

நாட்டை விட்டு தலைமறைவாகிவிட்ட ஜாகிர் நாயக்கிற்கு எதிராக இந்திய அமலாக்கத்துறை பண பரிவர்த்தனை மோசடி தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது. 

அதேவேளையில், பல சமயங்களைக் கொண்ட சரவாக்கில் ஜாகிர் நாயக்கை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று மாநில அரசு அறிவித்திருக்கிறது. அந்த வகையில் சரவா அரசியல் தலைவர்களை நான் பெரிதும் பாராட்டுகிறேன். 

மலேசியாவில் நல்லெண்ணத்தை வளர்ப்பதற்கு ஜாகிர் நாயக், உதவக் கூடியவர் அல்லர் என்பதை உணர்ந்து மிகத் தெளிவான ஒரு நிலைப்பட்டை சரவா தலைவர்கள் எடுத்திருக்கிறார்கள். மேற்கண்டவாறு தம்முடைய அறிக்கையில் குலசேகரன் தெரிவித்துள்ளார்.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS