அடுத்த வாரம் அமைச்சரவை மாற்றம்? 3 அமைச்சர்கள் பதவி நிரப்பப்படலாம்!

அரசியல்
Typography

கோலாலம்பூர், ஜூன் 25- காலியாக உள்ள மூன்று அமைச்சர்கள் மற்றும் இரண்டு துணையமைச்சர்கள் பதவிகளை நிரப்பும் நோக்கில், அடுத்த வாரத்தில் சிறிய அளவிலான அமைச்சரவை மாற்றம் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படிப் பார்த்தாலும், இந்த மாற்றம் விரிவானதாக இருக்காது என்று உள்ளூர் நாளிதழ் ஒன்று குறிப்பட்டுள்ளது. அடுத்த வாரத் தொடக்கத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம்.

சரவா கபிட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அலெக்சாண்டர் நன்டா லிங்கி, தோட்டத் தொழில் துறை மற்றும் மூலப் பொருள் அமைச்சராக நியமிக்கப்படக் கூடுமென்று பரவலாக நம்பப்படுகிறது. இந்த அமைச்சில் அமைச்சர் பொறுப்பில் இருந்த டத்தோஶ்ரீ டக்ளஸ் எம்பாஸ், அண்மையில் பதவியிலிருந்து விலகி சரவா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அவர் தற்போது மூன்று சரவா துணை முதல்வர்களில் ஒருவராக பொறுப் பேற்றுள்ளார்.

தற்போது அலெக்சாண்டர் லிங்கி, கிராம மற்றும் வட்டார மேம்பாட்டுத் துறை துணையமைச்சராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரதமர் துறையில் அமைச்சர் பொறுப்புக்களில் இருந்த டான்ஶ்ரீ இட்ரிஸ் ஜாலா மற்றும் டான்ஶ்ரீ வாஹிட் ஒமார் ஆகியோரின் இடங்கள் காலியாக இருப்பதால் அந்த இடங்களும் பூர்த்தி செய்யப்படவுள்ளன.

குறைந்தபட்சம் இரண்டு துணையமைச்சர் பதவிகளுக்கும் நியமனங்கள் செய்யப்படும் என்று கருதப்படுகிறது. அண்மைய ஹெலிகாப்டர் விபத்தில் காலமான தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருள் துறை துணையமைச்சர் நோரியா கஸ்னோனுக்குப் பதிலாக புதிய துணையமைச்சர் நியமிக்கப்படலாம். உள்நாட்டு வர்த்தகம் மற்றும் கூட்டுறவுத் துறை துணையமைச்சர் பதவியும் காலியாக இருக்கிறது.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS