"சரவாக் தேர்தலுக்குப் பின் மகாதீர் கைதாகலாம்"- சாயிட் இப்ராஹிம் ஆரூடம் 

அரசியல்
Typography

கோலாலம்பூர்,ஏப்ரல் 20 - எதிர்வரும் சரவாக் பொதுத்தேர்தலுக்குப் பின்  நாட்டின் முன்னாள் பிரதமர்  டத்தோ துன் டாக்டர் மகாதீர் முகமது   கைது செய்யப்படலாம் என  முன்னாள் சட்டத்துறை அமைச்சர்  சாயிட் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். 

 கிளந்தானில் பார்ட்டி அமானா நெகாராவைச் சேர்ந்த   சுமார்  300   தன்னார்வலர்களுடனான கேள்வி பதில் அங்கத்தில் கலந்துகொண்ட   சாயிட் இப்ராஹிம் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமர் நஜிப் துன் ரசாக்கை ஆட்சியிலிருந்து கவிழ்ப்பதற்காகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக நடப்பு அரசாங்கம் கூறி வரும் போதிலும்,  துன் டாக்டர் மகாதீர் நஜீப் மீதான கடும்  விமர்சனங்களைத் தொடர்ந்து  வெளியிட்டு வருகிறார். 

 முன்னதாக, துன் டாக்டர்    மகாதீர்  முகமது மீது 4  விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அரச மலேசிய காவல்படைத் தலைவர் டான் ஶ்ரீ காலிட் அபு பாக்கார் தெரிவித்தார். 

  எனினும்,  90 வயதான துன் டாக்டர் மகாதீர் கைது செய்யப்படுவாரேயானால், ஆளுங்கட்சிக்கு மலாய்க்காரர்களிடையே செல்வாக்கு குறையும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். 

இதனிடையே இந்த கேள்வி பதில் அங்கத்தில், மகாதீரை நம்பலாமா என கேள்வி எழுப்பப்பட்டது. இக்கேள்விக்குப் பதிலளித்த சாயிட்,  "அவர் எங்களோடு இருக்கும் வரை அவரை நம்பலாம். துன் அப்துல்லா அஹ்மாட் படாவியைப் போல் அல்லாமல் நடப்பு பிரதமரை அவர் காரசாரமாக விமர்சித்து வருகிறார். எதிர்வரும் சரவாக் தேர்தலுக்குப் பிறகு துன் டாக்டர் மகாதீர்  கைது செய்யப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை" என சாயிட் இப்ராஹிம் தெரிவித்தார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS