4ஆவது முறையாக பிரதமர் நஜிப் இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம்!

அரசியல்
Typography

கோலாலம்பூர், ஜன.22-  ஆசியான் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக  பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்,  புதன்கிழமை புதுடில்லி செல்லவிருக்கிறார். பிரதமராக நஜிப் பதவியேற்றது முதல் அவர் இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வது இது நான்காவது முறையாகும்.

கடந்த ஆண்டில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பயணம் ஒன்றை பிரதமர் நஜிப் மேற்கொண்டார்.  அப்போது இருநாடுகளின் வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மிகப்பெரிய வர்த்தக உடன்பாடுகளில்  கையெழுத்திட்ட வைபவத்திற்கு பிரதமர் நஜிப்பும் பிரதமர் நரேந்திர மோடியும் முன்னிலை வகித்தனர்.

மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே சுமார் 158.68 பில்லியன் ரிங்கிட் மதிப்பைக் கொண்ட வர்த்தக உடன்பாடுகள் அப்போது கையெழுத்தி டப்பட்டன.  பத்து நாடுகளைக் கொண்ட ஆசியான் கூட்டமைப்புக்கும்   இந்தியாவுக்கும் இடையேயான நட்புறவு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில்  மிக முக்கி அம்சமாக விளங்கி வருகிறது.

இந்த உச்சநிலை மாநாட்டின் பணிகளுக்கிடையே பிரதமர் மோடியை பிரதமர் நஜிப் சந்தித்து பேசவிருக்கிறார். 2030ஆம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய வல்லமைமிக்க பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுக்கும் என்று ஆரூடங்கள் கூறப்படும் நிலையில்  இந்தியாவுடனான உறவுகளை மேலும் விரிவாக்குவதில் பிரதமர் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார் என்று 'சீட்' அமைப்பின் முன்னாள்  தலைமைச் செயல் அதிகாரியான டாக்டர் ஏ.டி. குமார ராஜா தெரிவித்தார்.

இந்தியாவுடனான மலேசியாவின் உறவு என்பது சமூக ரீதியில் மிக வலுவான அடித்தளத்தைக் கொண்டதாகும். இம்முறை இருநாட்டுத் தலைவர்களும் சந்திக்கும் போது கடந்த ஆண்டில் கையெழுத்தான பல உடன்பாடுகள் குறித்த மீள்பார்வைக்கு வழி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS