ஒரு வாக்கு வித்தியாசத்தில் எதிர்க்கட்சி தீர்மானம் தோல்வி; நாடாளுமன்றத்தில் அமளி!

அரசியல்
Typography

கோலாலம்பூர், நவ.21- அமைச்சு ஒன்றுக்கு 2018-ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீடை எதிர்க்கும் எதிர்கட்சியின் தீர்மானம், ஒரே வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. 

அந்த ஒதுக்கீட்டுக்கு எதிரான வாக்களிப்பை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சியின் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.மணிவண்ணன் முன்மொழிந்தார். அதனைத் தொடர்ந்து, அந்த வாக்கெடுப்பை நடத்த, துணை சபாநாயகர் டத்தோஶ்ரீ டாக்டர் ரோனல்டு கியான்டி அனுமதி வழங்கினார். 

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள இதர நாடாளுமன்ற உறுப்பினர்கள், இரண்டு நிமிடங்களுக்குள் மக்களவைக்குள் வர வேண்டும் என்பதற்கான அறிகுறியாக, அந்த இரண்டு நிமிடங்களுக்கு மணி ஒன்று ஒலிக்கப்பட்டது. 

ஆனால், அந்த மணி ஒலி நிறுத்தப்பட்ட பின்னரும், பல தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களவைக்குள் வந்ததாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டினர். அந்த வாக்கெடுப்பு நடந்து முடிந்து, அதன் முடிவினை 'பெந்தாரா'விடம் கொடுத்து விட்டதாகவும், நேரம் தாழ்த்தி மக்களவையில் புகுந்த தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கும் பொருட்டு, அந்தப் பட்டியல் மீண்டும் அவர்களிடத்தில் கொடுக்கப்பட்டதாக எதிர்கட்சியினர் குறைக்கூறினர்.  

அதனைத் தொடந்து, எதிர்கட்சியினர் "பொய்..பொய்..பொய்.." என்று கூச்சலிட்டனர். தாமதமாக வந்தவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கக்கூடாது என்று அவர்கள் ஆராவரம் செய்தனர். இந்த அமளி 15 நிமிடங்களுக்கு தொடர்ந்தது.

அதனைத் தொடர்ந்து, அந்தத் தீர்மானம் 51-52 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்டதாக ரோனல்டு கியான்டி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அந்த முடிவினை மாற்றும் பொருட்டு, அந்த வாக்கெடுப்பு மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று எதிர்கட்சியினர் கேட்டுக் கொண்டனர். 

இந்த 51-52 என்ற எண்ணிக்கையில் அவர்களின் தீர்மானம் தோல்வி அடைவது நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு எதிரானது என்று பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் தெரிவித்தார். "உங்களிடம் வாக்களிப்பு பட்டியல் கொடுத்தாகி விட்டது. ஏன் நீங்கள் மீண்டும் அதனை மற்றவர்களுக்காக மாற்றம் செய்தீர்கள்? இது நியாயமற்ற செயல்" என்று ரோனலிடம் கோபிந்த் தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார். 

இதனிடையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் உள்ளே வர வேண்டும் என்று எந்த விதிமுறையும் இல்லை என்று ரோனல்டு விளக்கினார். ஆனால், அவரின் விளக்கத்தை எதிர்கட்சியினர் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த வாக்களிப்பு மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர். அவர்களின் அந்த வேண்டுகோளைச் சட்டை செய்யாமல், மற்ற விவாதங்களை ரோனல்டு செவிமடுக்க தொடங்கினார்.. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS