அடுத்த பொதுத்தேர்தல் முக்கிய சவால்: மஇகா எதிர்காலம் கேள்விக்குறி! -டாக்டர் சுப்ரா

அரசியல்
Typography

 கோலாலம்பூர், செப் 23- ம.இ.கா ஒரு முக்கிய காலக்கட்டத்தில் இருக்கிறது. 14 ஆவது பொதுத்தேர்தலை நாம் சந்திக்கப் போகிறோம். கட்சியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய சவால்மிக்க பொதுத்தேர்தலாக இது இருக்கப் போகிறது  என்று ம.இ.காவின் தேசிய தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் அறிவுறுத்தினார். 

கட்சிக்குள் போட்டி பொறாமைக்கும், உட்பூசலுக்கும், முற்றுப்புள்ளி வைக்கா விட்டால் எதிர்க்கட்சிகள் நம்மை தோற்றடிக்க வேண்டியதில்லை. நம்மை நாமே தோற்றடித்துக் கொள்வோம் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இன்று புத்ரா உலக வாணிப மையத்தின் அருகிலுள்ள டேவான் துன் ரசாக்கில் நடந்த ம.இ.கா தேசிய பேராளர் மாநாட்டில் கொள்கை உரை நிகழ்த்திய போது சுகாதார அமைச்சரான டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்தார். சுமார் 4 ஆயிரம் பேராளர்களுடன் இந்த இரண்டு நாள் மாநாடு இங்கு தொடங்கியது.

2008-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலிலும் 2013ஆம்ஆண்டு பொதுத் தேர்தலிலும் தேசிய முன்னணி சரிவைக் கண்டுள்ளது. மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை இழந்தது என்று சுட்டிக்காட்டினார். தம்முடைய உரையில் அவர் மேலும் கூறியதாவது: 

கடந்த பொதுத் தேர்தலில் ஒன்பது நாடளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் மட்டுமே ம.இ.கா வென்றது. 18 சட்டமன்றத் தொகுதிகளில் ஐந்தில் மட்டுமே வென்றது.

அடுத்து வரவிருக்கும் 14-ஆவது பொதுத்தேர்தலில் ம.இ.கா கூடுதலான தொகுதிகளில் வெற்றியை ஈட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இல்லையேல், நமது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். 

நாம் கூடுதலான தொகுதிகளில் வெற்றிப் பெறத் தவறினால், தேசிய முன்னணியில் நம்முடைய பிரதிநிதித்துவம் இல்லாமல் போகலாம். அதற்கு மாற்றாக, பிற இந்திய கட்சிகள் தேசிய முன்னணியில் பிரதிநிதித்துவம் பெற நேரலாம். இத்தகைய சூழ்நிலையை ம.இ.காவிலுள்ள அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். முழுமையான ஆதரவைத் திரட்ட வேண்டும்.

ஆளுக்கு ஆள் வேட்பாளர்களை பிரகடனம் செய்வது நிறுத்தப் படவேண்டும். ஒரு தொகுதியில் மூன்று வேட்பாளர்களை எல்லாம் நிறுத்தமுடியாது. ஒரு தொகுதிக்கு, கட்சி ஒரு வேட்பாளரைதான் நிறுத்த முடியும் என்பதை கவனத்தில் வையுங்கள். எனவே, ஆளுக்கு ஆள் வேட்பாளரை அறிவிப்பதை நிறுத்துங்கள். இது நமக்கு நாமே குழிப்பறித்துக் கொள்வதற்கு சமமாகிறது.

எனவே, ம.இ.கா ஒன்றுபட்டு மக்களின் ஆதரவைத் திரட்டும் பணிகளில் ஈடுபடுவது அவசியம். போட்டி, பொறாமைகளை கைவிடாவிட்டால் நம்முடைய தோல்வியை நாமே தேடிக் கொண்டது போல ஆகிவிடும். அம்னோவுக்கு அடுத்து அதிகமான வாக்காளர்களைப் பதிவு செய்த கட்சியாக ம.இ.கா விளங்குகிறது. இந்தப் பணி தொடரவேண்டும். 

மேற்கண்டவாறு ம.இ.கா பேராளர் மாநாட்டில் டத்தோஶ்ரீ டாக்டர். சுப்பிரமணியம் தமது உரையில் வலியுறுத்தினார்.  

 

BLOG COMMENTS POWERED BY DISQUS