தே.மு.வை ஹிண்ட்ராப் ஆதரித்தது  தவறு தான்! -வேதமூர்த்தி ஒப்புதல்

அரசியல்
Typography

கோலாலம்பூர், செப்.13- கடந்த போதுத் தேர்தலில் ஹிண்ட்ராப் இயக்கம் தேசிய முன்னணியை ஆதரித்தது ஒரு தவறான செயல் என்பதை ஒப்புக்கொண்ட அதன் தலைவர் வேதமூர்த்தி, எதிர்க்கட்சி கூட்டணியுடன் அன்றைய காலக்கட்டத்தில் இணக்கமான ஒரு பொதுக் கொள்கைத் திட்டத்தை அடைய முடியாமல் போனதால்தான் அந்தத் தவறு நடந்தது என்று விளக்கினார்.

இந்தியர்களின் உரிமைக்காக போராடி வரும் ஹிண்ட்ராப் இயக்கம், தேசிய முன்னணியுடன் உடன்பாட்டில் கையெழுத்திட வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு அப்போது தள்ளப்பட்டு விட்டதாக அவர் சொன்னார்.

இந்திய சமுதாயத்திற்கு எதிர்க்கட்சி கூட்டணி, எந்த அடிப்படைத் திட்டத்தில் உதவமுடியும் என்பது தொடர்பில் 20க்கும் அதிகமான சந்திப்புக்கள் அப்போது நடத்தப்பட்டது. ஆனால், இணக்கம் காணமுடியாமல் போய் விட்டது.

ஒருவேளை தேசிய முன்னணி தரும் வாக்குறுதிகளை அது காப்பாற்றாமல் போகலாம் என்று எங்களுக்குத் தெரியும். இந்திய சமுதாயத்தில் பின்தள்ளப்பட்ட, ஏழை மக்களுக்காக போராடும் இயக்கம் ஹிண்ட்ராப் என்பதால் எங்களுக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது என்று வேதமூர்த்தி தெரிவித்தார்.

அதுவொரு துரதிஷ்டமான நிலை என்று அவர் வர்ணித்தார். இங்குள்ள கோலாலம்பூர், சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் நேற்றிரவு நடந்த கூட்டத்தில் வேதமூர்த்தி பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஜசெக தலைவர்களில் ஒருவரான ஸைட் இப்ராகிம் மற்றும் அமானா நெகாரா தலைவர் முகம்மட் சாபு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஆனால், அன்றைக்கு பக்காத்தான் ரயாத் கூட்டணிக்கு ஆதரவாக ஹிண்ட்ராப் இயக்கம் பிரசாரம் நடத்தி இருந்தால், இன்று அந்தக் கூட்டணி புத்ரா ஜெயாவில் ஆட்சி பீடத்தில் இருந்திருக்கும். நாமெல்லோருமே தப்புச் செய்துள்ளோம். நானும் தப்புச் செய்துள்ளேன். ஆனால், அந்தத் தருணத்தில் நான் செய்வது தவறு என்று எனக்குத் தெரியவில்லை. இந்திய சமுதாயத்தின் தேவைகள், உரிமைகள் குறித்து அப்போது எழுத்துப்பூர்வமாக உடன்பாடு காணப்பட்டது. ஆனால், அவை அமல்படுத்தப்படாமல் போய்விட்டது என்று வேதமூர்த்தி சொன்னார்.

 

 
 
 
BLOG COMMENTS POWERED BY DISQUS