சர்ச்சை மசோதாவுக்கு நிறைவேற்றம்: ‘முகத்தில் விழுந்த அறை!’ -இராமசாமி!

அரசியல்
Typography

 

கோலாலம்பூர், ஆக.10- சட்டச் சீர்திருத்த (திருமண மற்றும் மணவிலக்கு) திருத்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டிருப்பதானது, முஸ்லிம் அல்லாத மலேசியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. 

மக்களின் கவலைகள், அதிருப்திகள் பற்றியெல்லாம் கொஞ்சமும் அக்கறை காட்டாத வகையில், இந்தச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப் பட்டிருப்பதாக பினாங்கின் 2ஆவது துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் இராமசாமி சாடினார்.

தங்களின் தொகுதி மக்களுக்கு இந்தப் பிரச்சனை குறித்து தேசிய முன்னணியின் பங்காளிக் காட்சிகள் எப்படி, எத்தகைய விளக்கத்தைத் தரப் போகின்றன? என்பது குறித்து தாம் வியப்படைந்து இருப்பது அவர் சொன்னார்.

சில காலமாக முஸ்லிம் அல்லாத மலேசியர்களைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டிருந்த தன்மூப்பான மத மாற்ற பிரச்சனைகளின் கொடுமை, ஒரு முடிவுக்கு வரப்போகிறது என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய மசோதா, முஸ்லீம் அல்லாதாரின் உரிமைகள் ஒட்டுமொத்தமாக விற்கப்பட்டு விட்டதையே காட்டுகிறது என்றார் அவர்.

முஸ்லிம் அல்லாதாரிடம் தற்போதுள்ள பதட்டத்தையும் உளைச்சலையும் மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் மதமாற்றப் பிரச்சனைக்கு ஒரு முடிவற்ற சூழலை உருவாக்கியுள்ளது என்று டாக்டர் இராமசாமி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். 

முஸ்லீம் அல்லாத மலேசியர்களின் உரிமையை மறுப்பதில் அரசாங்கம் ஒரு சரியான வழியைக் கையாண்டுள்ளது என பாஸ் மற்றும் அம்னோவிலுள்ள சமயத் தீவிரவாதிகளுக்கு உற்சாகத்தை அளிக்கத்தக்கதாக இந்த புதிய மசோதவின் நிறைவேற்றம் அமைந்து விட்டது.

முன்பு இருந்த மசோதாவை மீட்டுக்கொண்டு, புதிய மசோதாவை தாக்கல் செய்து, அதனை தேசிய முன்னணி அரசு நிறைவேற்றி இருப்பது பாஸ் கட்சிக்குக் கிடைத்த வெற்றி என்று அவர் சுட்டிக் காட்டினார்.

பொதுத்தேர்தல் வரும் முன்பே அம்னோவிடமிருந்து இத்தகைய அரசியல் ஆதாயங்களை அறுவடை செய்வோம் என பாஸ் கட்சி கற்பனை கூட செய்திருக்காது என்றார் அவர்.

குறிப்பாக, பெற்றோர்களில் தந்தை அல்லது தாயின் அனுமதியின்றி பிள்ளைகளை மத மாற்றம் செய்வதைத் தடுக்கும் ’88-ஏ’ விதியைத் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவில் இருந்து அகற்றப்பட்டிருக்கிறது. இது, மஇகா, கெராக்கான் மற்றும் மசீச ஆகிய கட்சிகளைச் சேர்ந்த முஸ்லீம் அல்லாத தலைவர்களின் முகத்தில் அறைந்ததற்குச் சமம் என்றும் டாக்டர் இராமசாமி சொன்னார்.

அம்னோவிலுள்ள தங்களின் எஜமானர்களைச் சந்தோசப் படுத்துவதற்காகவும், தங்களின் பதவிகளில் நீடிப்பதற்காகவும் முஸ்லீம் தீவிரவாதிகளிடம் தங்களது சமுதாயத்தின் உரிமைகளை விற்கும் நிலைக்கு இந்த தலைவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று அவர் சாடினார்.  

BLOG COMMENTS POWERED BY DISQUS