ஸாஹிட் பற்றிய விமர்சனம்: டத்தோ சிவராஜ் விளக்கம்

அரசியல்
Typography

கோலாலம்பூர், ஆக.1- முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் அடையாள ஆவணத்தைக் காட்டி, அவர் கேரளா வம்சாவளி என்று பகிரங்கமாக துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாஹிட் ஹமிட் அறிவித்தது குறித்து மஇகா இளைஞர் தலைவர்களில் ஒருவர் தாக்கிப் பேசியிருக்கும் நிலையில், அதிலிருந்து மஇகா இளைஞர் பிரிவு ஒதுங்கி கொண்டிருக்கிறது.

சம்பந்தப்பட்ட அந்த இளைஞர் தலைவரின் கருத்து மஇகா  தேசிய இளைஞர் பிரிவின் நிலைப்பாட்டை பிரதிபலிக்காது என்று அதன் தலைவர் டத்தோ சிவராஜ் அறிவித்துள்ளார்.

துன் மாகாதீரின் பரம்பரை பற்றி டத்தோஶ்ரீ ஸாஹிட் பேசியுள்ள கருத்து அவமானகரமானது என்று தம்முடைய முகநூலில், மஇகா இளைஞர் அமைப்பின் கல்விப்பிரிவுத் தலைவர் கணேசன் சீரங்கம் கருத்து வெளியிட்டிருப்பதாக பெரித்தா டெய்லி செய்தி ஒன்று கூறியது.

ஸாஹிட்டின் பேச்சு அதற்குரிய மரியாதையை இழந்துவிட்டது. மலேசியர்கள் அனைவரின் முன்பும் மதிப்பிழந்துவிட்டது. மற்ற இனவாதிகளுக்கும் அவருக்கும் வித்தியாசம் இல்லை என்றாகிவிட்டது என்று கணேசன் சீரங்கம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, கருத்துரைத்த மஇகா இளைஞர் பிரிவின் தேசிய தலைவர் சிவராஜ் மேற்கண்ட கருத்து கணேசனின் தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்தார். இது இளைஞர் பிரிவின் கருத்தல்ல. இது குறித்து, கணேசனிடம் தாம் விளக்கம் பெறவிருப்பதாகவும் அவர் சொன்னார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS