இந்தியர்களை ஓரங்கட்டியது யார்? குலசேகரனுக்கு சிவராஜா பதிலடி!

அரசியல்
Typography

கோலாலம்பூர், ஜூலை.13- வாக்குத் திரட்ட வேண்டிய தருணம் வரும் போது மட்டும் தான் இந்தியர்களுக்கான வளர்ச்சி வியூகத் (புளூபிரிண்ட்) திட்டமா? எனக் கேள்வி எழுப்பியிருக்கும் ஈப்போ பாராட் தொகுதி எம்.பி.யான குலசேகரன், தம்முடைய  வழக்கமான கதை வசனத்தை மாற்றி எழுதுவாரா? அதற்கான தருணம் இது என்பதை புரிந்து கொள்வாரா? என்று ம.இ.கா. தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சிவராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்தியர்கள் ஓரங்கட்டப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு விட்டனர் என்று கூறும் குலசேகரன், எப்படி அவர்கள் ஓரங்கட்டப்பட்டார்கள் என்பதை மறுஆய்வு செய்ய முன்வருவாரா? திட்டமிட்டு கட்டம் கட்டமாக இந்தியர்களை ஓரங்கட்டியது யார்? என்று ஆராய ஓர் அரச விசாரணைக் கமிஷனை அமைக்க முனைந்தால் என்ன..? என்று டத்தோ சிவராஜ் சுட்டிக் காட்டினார்.

இந்தியர்களின் புளூபிரிண்ட் திட்டம் குறித்து ஜ.செ.கவின் உதவித் தலைவருமான குலசேகரன் விமர்சித்து இருப்பது தொடர்பில் டத்தோ சிவராஜ் விடுத்துள்ள அறிக்கை விபரம் வருமாறு:

1970-ஆம் ஆண்டில் அரசாங்க வேலைகளில் 17 விழுக்காடாக இருந்த இந்தியர்கள், இப்போது 5 விழுக்காட்டுக்குக் குறைவாக உள்ளனர். அரசாங்கம் மற்றும் தனியார் துறைகளில் இந்தியர்கள் ஓரங்கட்டப்பட்டு விட்டார்கள் என்று குலசேகரன் கூறியுள்ளார். இது யாரால்? இந்தக் கேள்விகளைக் குலசேகரன் அவருடைய இப்போதைய 'தலைவராக' விளங்கும் துன் மகாதீரை நோக்கி அல்லவா கேட்க வேண்டும்?

இந்நாட்டில் இந்தியர்கள் ஓரங்கட்டப்பட்டது துன் மகாதீரினால் தான் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், குலசேகரனைப் போன்றவர்கள் அந்தப் பழியை பிரதமர் டத்தோ நஜீப் மீது போட முயற்சிக்கிறார்கள். பிரதமர் பதவியேற்ற 8 ஆண்டுகளில் இந்தியர்களுக்கான பல திட்டங்களை பிரதமர் நஜிப்  மேற்கொண்டு வருகிறார். 

இந்தியர்களின் புளூபிரிண்ட் திட்டத்தை குலசேகரன் தொடர்ந்து வாரம் தவறாமல் குறைக் கூறிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு தேர்தலுக்கும் புதிய புளூபிரிண்ட் போட்டு விரயம் செய்கிறார்கள் என்கிறார். மேலும், எல்லா இன மக்களும் இது சமமானதாக இருக்க வேண்டும் என்றும் குலசேகரன் வலியுறுத்துகிறார். இந்தியர்களுக்கென தனியான  திட்டம் தேவையில்லை என்று இவரும் இவருடைய சகாக்களும் கூறுகிறார்கள்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஏற்கனவே இந்தியர்களுக்கான உதவித் திட்டங்களை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்கிறார். ஆனால், இதுவரை யார் கண்ணுக்கும் அப்படிப்பட்ட திட்டங்கள் இருப்பதாக தெரியவில்லை. 

முதலில் குலசேகரன் தனது வழக்கமான கதை வசனத்தை மாற்றி எழுத வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவருடைய சிந்தனை ஆற்றலில் ஏமாற்றம் தரும் வகையில் 'வெற்றிடம்' விழுந்து விட்டது.

புளூபிரிண்ட் திட்டத்தைப் படித்துப் பார்த்தாலே தெரியும். இந்திய சமுதாயத்தைப் பாதிக்கும் அனைத்து அம்சங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. 'செடிக்' அலுவலகத்தில் 50பேர் ஊழியர்கள் கொண்ட பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளுக்கான திட்டமாக இது வகுக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் மாதத்தில்தான் புளூபிரிண்ட் வியூகத் திட்டம் தொடங்கப்பட்டது என்றாலும் ‘செடிக்’ அமைப்பு திட்ட அமலாக்கத்தில் மிகத் துரிதமாக இயங்கியுள்ளது.

எந்தவொரு தீர்வுத் திட்டத்தையும் முன்வைக்காமல் வாரந்தோறும் குறை சொல்லிக் கொண்டிருப்பதே குலசேகரன் மற்றும் அவர்களது சகாக்களின் வேலையாகி விட்டது. இவர்கள் விருந்து நடத்தி வசூல் நடத்துவதில் காட்டும் தீவிரமான ஈடுபாட்டை வியூகம் திட்டங்கள் பட்டியலிடப்படும் சமுதாய வளர்ச்சித் திட்டங்களின் அமலாக்கத்தின் மீது காட்டலாம்

குறைந்தபட்சம் எதிர்க்கட்சிகள் கட்சிக்கு உட்பட உங்கள் மாநிலங்களில் இந்திய சமுதாயத்திற்கு நீங்கள் என்ன வைத்துருக்கிறீர்கள் என்பதையாவது எதிர்க்கட்சிகள் எங்களுக்குக் காட்டலாம் அல்லவா...! 

இவ்வாறு தம்முடைய அறிக்கையில் மஇகாவின் தேசிய இளைஞர் பிரிவுத் தலைவரான டத்தோ சிவராஜ் கூறியுள்ளார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS