புத்ராஜெயா, பிப்.27- பிரதமர் நஜிப் உடனான சந்திப்பில் கலந்து கொள்வதற்காக சவூதி அரேபியாவின் மன்னர் கிங் சல்மான் அப்துலசிஸ் அல் சவுட் இன்று புத்ராஜெயாவில் உள்ள ஶ்ரீ பெர்டானா வந்தடைந்தார். அவரை நாட்டுப் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் அதிகாரப்பூர்வமாக வரவேற்றார்.

இன்று மதியம் 2.30 மணிக்கு ஶ்ரீ பெர்டானாவை வந்தடைந்த கிங் சல்மானை பிரதமர் நேரில் சென்று வரவேற்றார். பின்னர் இருவரும் சந்திப்பு கூட்டம் நடந்த இடத்திற்கு சென்றனர். 

மலேசியா மற்றும் சவூதி அரேபியா இருநாட்டுக்கிடையே நல்லுறவு வளர்க்கும் நான்கு ஒப்பந்தங்களில் இருவரும் கையெழுத்து இடுவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பொருளாதாரம், அந்நிய தொழிலாளிகள், மனித வளம் மற்றும் அறிவியல் கல்வி தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கோலாலம்பூர், பிப்.21- கிம் ஜோங் நாம் படுகொலை மீது மலேசியா மேற்கொண்டு வரும் விசாரணையில் சந்தேகம் கொண்டு வட கொரியா தெரிவித்திருக்கும் கருத்து அரச தந்திர அளவில் பொறுப்பற்ற முரட்டுத்தனமான பேச்சு என பிரதமர் நஜிப் துன் ரசாக் கண்டனம் தெரிவித்தார். 

வட கொரியா தலைவரின் சகோதரர் கேஎல்ஐஏ 2-இல் கொல்லப்பட்டதை அடுத்து மலேசியா மேற்கொண்டு வரும் புலன் விசாரணை மீது வட கொரியாவுக்கு நம்பிக்கை இல்லை என அந்நாட்டுக்கான தூதர் காங் சோல் கருத்து தெரிவித்திருந்தார். 

இதனைக் குறித்து பேசிய பிரதமர், தூதரின் கருத்து தேவையில்லாதது. மேலும் அது அரச தந்திர அளவில் அவரின் கருத்து மிகவும் முரட்டுத்தனமானதும் கூட" என சாடினார். "ஆனாலும், மலேசியா தன் நிலைநாட்டில் என்றும் உறுதியாக இருக்கும்" என மேலும் அவர் கூறினார்.

கோலாலம்பூர், பிப்.20- விமான நிலையத்தில் கிம் ஜோங் நாம் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் வட கொரியா மீது தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் எதுவும் எங்களுக்கு இல்லை என்று பிரதமர் நஜிப் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் வட கொரியாவின் சில குறைகூறல்கள் பற்றி பிரதமர் முதன் முறையாக கருத்துரைத்திருக்கிறார். கேஎல்ஐஏ-2 விமானநிலையத்தில் வடகொரிய அதிபரின் மூத்த சகோதரர் கிம் ஜோங் நாம் கொலை செய்யப்பட்டது மீதான புலன் விசாரணைகளில் மலேசிய போலீசார் திட்டவட்டமாக இருப்பர் என்றார் அவர்.

இந்த புலன்விசாரணையின் பின்னணியில் வேறொரு தரப்பின் தொடர்பு இருப்பதாக வடகொரியா குற்றஞ்சாட்டி இருப்பதை பற்றி கருத்துக் கூறிய போது பிரதமர் நஜிப் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தென்கொரியாவில் தற்போது நிலவும் தலைமைத்துவ நெருக்கடி தொடர்பான கவனத்தைத் திசைத் திருப்பும் பொருட்டு தென்கொரியாவுக்கு உதவுவதில் மலேசியா ஈடுபட்டுள்ளதாக வடகொரியா குறை கூறியிருப்பதற்கு பிரதமர் பதில் கூறினார்.

மலேசிய அதிகாரிகள் நடத்தும் புலன் விசாரணைகள் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனக் காரணம் காட்டி இருநாடுகளும் இந்தப் புலன் விசாரணையை சேர்ந்து செய்யலாம் என மலேசியாவுக்கான வடகொரியத்தூதர் காங் சோல் குறிப்பிட்டிருந்தார்.

அவருக்குப் பதிலளித்த பிரதமர் நஜிப், எங்கள் நாட்டின் போலீஸ், புலன் விசாரணை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் மீது எங்களுக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது என்று நஜிப் வலியுறுத்தினார்.

மலேசியாவில் எதுவும் சட்டத்தின்படி நடக்கும் என்பதை வட கொரியா புரிந்துகொள்ளும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

மலேசியாவில் நடந்த இந்தப் படுகொலைக்கு வடகொரிய தலைமை தான் காரணம் எனத் தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டில் கிம் ஜோங் நாமிற்கு எதிராக நடந்த கொலை முயற்சி தோல்வி கண்டது. அதன் பின்னர் தமது மூத்த சகோதரனைக் கொல்லவேண்டும் என்று வட கொரியத் தலைவர் கிம் ஜோங் யுன் நிரந்தர உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்ததாக தென் கொரியா கூறுகிறது.

 

 

 

 கோலாலம்பூர், பிப்.19- அம்னோவுக்கும் பாஸ் கட்சிக்கும் இடையே நிலவும் ஒத்துழைப்பு என்பது ஒரு புதிய விஷயம் அல்ல. ஷரியா சட்டத்தில் திருத்தம் செய்ய தாங்கள் முன்மொழிந்திருக்கும் மசோதாவை நிறைவேற்றுவதில் இரு கட்சிக்களுக்கும் இடையே செயல்பூர்வமான ஒத்துழைப்பு நிலவுகிறது என்று பாஸ் தலைவர் அப்துல் ஹடி அவாங் சொன்னார்.

அம்னோவும் பாஸ் கட்சியும் இதர கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து சுதந்திர காலத்திற்கு முன்பிருந்தே ஒத்துழைப்பை பேணி வருகின்றன என்று அவர் சொன்னார்.

ஷரியா இஸ்லாமிய தண்டனைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதன் வழி, ஷரியா நீதிமன்றத்தின் அதிகார வரம்பை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் பாஸ் கட்சியின் தலைவர் ஹாடி அவாங் நாடாளுமன்றத்தில் அம்னோ ஒத்துழைப்போடு தனிநபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் இங்குள்ள பாடாங் பெர்போக்கில் பாஸ் கட்சி மிகப்பெரிய பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. 

அந்தப் பேரணியில் ஹடி அவாங் பேசிய போது இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு அம்னோவின் ஒத்துழைப்பு தொடர்ந்து தேவைப்படுகிறது என்று வலியுறுத்தினர். இந்தக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பாஸ் ஆதரவாளர்கள் திரண்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

More Articles ...