Top Stories

Grid List

கோலாலம்பூர், மே.22- பிரதமர் நஜீப்பிற்கு கிடைத்த ரிம. 2.6 பில்லியன் நன்கொடைத் தொகை ஏற்படுத்திய சர்ச்சை இன்னும் தீராத நிலையில், அத்தொகையிலிருந்து டான்ஶ்ரீ மொகிதீன் யாசினுக்கும் டத்தோஶ்ரீ ஷாப்பி அப்டாலுக்கும் பங்கு கிடைத்தது என சுற்றுலா துறை அமைச்சர் டத்தோஶ்ரீ நஸ்ரி அஸீஸ் கூறினார்.

அம்னோவில் உறுப்பினர்களாக இருந்தபோது அவர்களுக்கு இப்பணம் தரப்பட்டது என்று நேற்று நடந்த கேள்வி-பதில் நிகழ்ச்சியில் அவர் தெரிவித்தார். 

“எனக்கும் அந்த பணத்திலிருந்து பங்கு கிடைத்தது. தேர்தல் நன்கொடையான அப்பணம், அம்னோ கிளைகளின் தேர்தல் பிரச்சாரத்திற்காகவும் கிளை உறுப்பினர்களின் வீடு பழுதுபார்ப்பதற்காகவும்  தரப்பட்டது. ஒவ்வொரு கிளைக்கும் ரிம 5000 கிடைத்தது. எனக்கு கீழ் இயங்கிய கிளைகளுக்கான 10 லட்சம் ரிங்கிட் என்னிடம் தரப்பட்டது” என்றார் நஸ்ரி.

நஸ்ரியை விட, மொகிதீன் யாசின் மற்றும் ஷாப்பி அப்டால் கீழ் அதிக கிளைகள் இயங்கி வந்ததால் அவர்களுக்கு அதிக பணம் கிடைத்திருக்க வாய்ப்புள்ளது என்று அவர் மேலும் கூறினார். 

ஆனால், பணம் வாங்கியபோது கேள்வி ஏதும் அவர்கள் கேட்கவில்லை. அப்பணத்தின் மூலத்தையும் அவர்கள் விசாரிக்கவில்லை. ஆனால், அவர்களின் அரசியல் ஆசை நிறைவேறாத போது பல கேள்விகளை எழுப்புகின்றனர்.

தேர்தலுக்கு நன்கொடைப் பெறுவது தவறில்லை. மேலும், தேர்தல் நன்கொடையான அப்பணம் நஜீப்பின் சொந்த வங்கி கணக்கில் இருப்பதிலும் எந்தவித தவறும் இல்லை என்றும் நஸ்ரி கூறினார். 

“அவரது சொந்த கணக்கில் இருந்தால் தான் எவ்வளவு பணம் செலவு செய்யப்படுகிறது என்று நஜீப்பிற்கு தெரியும். இல்லையேல் செலவீனங்களை கணக்கு செய்வதில் கடினம் ஏற்படும்” என்றும் நஸ்ரி சொன்னார்.

கடந்த பொதுத் தேர்தலுக்கு அந்நன்கொடை பணத்திலிருந்து அம்னோ செய்த செலவு கிட்டத்தட்ட ரிம. 60 கோடி என்றும் நஸ்ரி விவரித்தார்.

 ஹானோய், மே.22- பொதுத்தேர்தல் எந்த நேரத்திலும் நடத்தப்படலாம் என்ற சூழ்நிலையில் வாழ்க்கைச் செலவினம் தான் மிகுந்த கவலை அளிக்கக்கூடிய அம்சமாக உருவெடுத்திருக்கிறது என்று வர்த்தக அமைச்சர் டத்தோஶ்ரீ முஸ்தபா முகமட் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைச் செலவினம் அதிகரித்திருப்பது தொடர்பில் மக்களிடையே அதிருப்திகளை ஏற்படுத்துவதற்கான வழிகளில் எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்தி வருகின்றன. ஏற்கெனவே, இடைத்தேர்தல்களின் போது மாநிலங்களின் நிதிப் பிரச்சனைகள் மற்றும் பிரதமர் தொடர்பாக நிதிமுறைகேடு புகார்கள் என்று பல பிரச்சனைகளைக் கிளப்பி அவர்கள் தோல்வி கண்டுவிட்டனர். என்று அவர் சாடினார்.

அடுத்து வரவிருக்கும் பொதுத்தேர்தலின் போது வாழ்க்கைச் செலவினப் பிரச்சனை தான் மலேசிய வாக்காளர்களிடையே மிக முக்கிய பிரச்சனையாக இருக்கும். இதுதான் தேர்தல் பிரசாரங்களின் போது அதிகம் பேசப்படலாம் என்றார் அவர்.

எப்போது பொதுத்தேர்தல் என்பதை பிரதமரே முடிவு செய்வார். சரியான தருணம் பார்த்து அந்த அதிரடி அறிவிப்பு வரலாம். எதிர்க்கட்சியினர் பிளவுபட்டிருப்பது ஒருவகையில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்கும் நிலையில், வாக்காளர்களுடனான தொடர்பை மேம்படுத்துவதில் ஆளுங்கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது என்று வியட்னாமிற்கு வருகை புரிந்திருக்கும் அமைச்சர் முஸ்தபா முகமட் செய்தியாளர்களிடம் பேசும் போது குறிப்பிட்டார். 

 

 

கோலாலம்பூர், மே.22- தனது கடந்த கால பாவங்களைச் சரி செய்யவே அன்வாரை விடுவிக்கும் மகஜரில் மகாதீர் கையெழுதிட்டார் என துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாஹிட் ஹமிடி சாடியுள்ளார்.

பிரதமராக இருந்த காலத்தில் அன்வார் மீது பழி சுமத்தி மகாதீரே சிறையிலிட்டார். பதவியில் இருந்த போது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காக இப்போது பாவத்தைக் கழுவ அதற்கான பரிகாரத்தை அவர் செய்கிறார் என்றார் ஸாஹிட்.

“மகாதீரைப் போல தனிமனித விரோதத்தினால் அன்வாரை நாங்கள் (அரசாங்கம்) சிறைக்கு அனுப்பவில்லை. அவர் செய்த ஓரினப் புணர்ச்சி குற்றத்திற்காகவே சட்டப்படி அவர் தண்டனை பெற்றார்” என்றும் ஸாஹிட் கூறினார்.

இதனிடையே அன்வாரை விடுவிக்கக் கோரி தேசிய மன்னிப்பு வாரியத்திற்கு அவருடைய மனைவி டத்தின்ஶ்ரீ வான் அஸிசா முறையீட்டு கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார். இந்த வாரியம் மாமன்னர் அதிகாரத்திற்கு உட்பட்டு இருப்பதால் அரசாங்கம் இதில் தலையிட முடியாது என்று வான் அஸிசா அறிக்கை விடுத்தார்.

நேற்று நடந்த பிகேஆர் கட்சியின் தேசிய மாநாட்டில் எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு அன்வாரை விடுதலை செய்ய வேண்டும் என்ற மகஜரில் கையெழுத்திட்டனர். அதில் மகாதீரும் அவர் மனைவி சித்தி ஹஸ்மாவும் உட்பட கையெழுத்திட்டனர்.

எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியைப் பிடித்தால் அன்வாரே அடுத்த பிரதமர் என்றும் இந்த மாநாட்டில் மகாதீர் முன்னிலையில் பிரகடனப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிப்பாங், மே 23- ரிம.3 லட்சம் மதிப்புள்ள 8 கிலோ கெத்தாமின் போதைப்பொருளைத் தனது துணிப்பையில் மறைத்து வைத்து மலேசியாவுக்குள் கடத்த முயன்ற இந்திய பிரஜை கேஎல்ஐஏ விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

ஞாயிற்றுகிழமை காலை 7.40 மணிக்கு கேரளாவிலிருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்திறங்கிய 38 வயது ஆடவரின் துணிப்பையை சுங்கத் துறை சோதனை இட்டப்போது போதைப்பொருள் கடத்தல் கண்டுப்பிடிக்கப்பட்டது.

ஆடவரின் துணிப்பையில் மறைத்து தைக்கப்பட்டிருந்த 54 பாக்கெட்டுகளில் 8 கிலோ போதைப்பொருளும் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன என சுங்கத்துறை துணை இயக்குனர் டத்தோ சூல்கிப்லி யாஹ்யா கூறினார். "புலன் விசாரணையில் அந்த ஆடவர் கெத்தாமின் போதைப்பொருள் என நம்பப்படும் வெள்ளை நிற கிறிஸ்டல் தூளை கடத்தி வந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

அதன் மொத்த எடை 8.37 கிலோ. அதன் மதிப்பு ரிம.376,650" என இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

செர்டாங், மே.23- அதிகமாக உபர் பயன்படுத்தும் பெண்கள் இரவில் வாடகை காரில் ஏறும்போது அதிக கவனமுடம் இருக்கவேண்டும். உபர் ஓட்டுனரை உடந்தையாக கொண்டு பெண்களைக் கொள்ளை அடிக்கும் சம்பவம் தலைநகரில் நடந்துள்ளது.

நேற்று இரவு 9.30க்கு பெண் ஒருவர் தன் வீட்டிற்குச் செல்வதற்காக உபரைப் பயன்படுத்தினார். உபர் மூலம் பாதுகாப்பாக வீட்டிற்குச் செல்லலாம் என்று நினைத்து ஏமாறியதுதான் மிச்சம்.மிட்வெலியிலிருந்து (Mid Valley) பூச்சோங் ஜெயாவில் உள்ள தன் வீட்டிற்குச் செல்வதற்கு அந்தப் பெண்மனி காருக்குள் செல்லும் முன்பே ஆடவன் ஒருவன் முன் பயண இருக்கையில் அமர்ந்திருக்கிறான். இருப்பினும் அதனைப் பெரிதாக கருதாத அப்பெண் வண்டியில் ஏறினார்.

‘ஓன் பூச்சோங் வர்த்தக மையத்திக்கு’ (One Puchong business centre) வந்தபோது, முன்னே அமர்ந்திருந்த ஆடவன் சட்டென்று கத்தியைக் காட்டி தன்னுடைய கைத்தொலைபேசி, பணம் அனைத்தையும் கொடுக்குமாறு மிரட்டினான் என்று அப்பெண் கூறினாள்.

அப்பெண்மனியின் பொருட்கள் அனைத்தையும் களவாடிய பின் அவளை சாலை ஓரத்தில் இறக்கி விட்டு சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டது. வழிப்போக்கர் ஒருவர் போலீசில் புகார் கொடுக்க அப்பெண்மணியை அழைத்து சென்றார். உபர் ஓட்டுனரையும் அந்த ஆடவனையும் தேடிக் கொண்டிருப்பதாக செர்டாங் துணை ஒசிபிடி லீ வை லியொங் கூறினார்.

உபர் நிறுவனத்தினர் இந்த விசாரணையில் போலீசுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் உபர் அதன் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் எனவும் கூறினர்.

கோலாலம்பூர், மே 23- பயங்கரவாத தாக்குதல் நடந்த மான்செஸ்டர் அரங்க பகுதிக்கு செல்வதை அங்குள்ள மலேசியர்கள் தவிர்க்கவேண்டும் என மலேசிய வெளியுறவு அமைச்சு கேட்டுக் கொண்டது. இங்கிலாந்தில் பதட்டநிலை நிலவுவதால் மலேசியர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என அது கேட்டுக் கொண்டது. 

இன்று காலையில் வெளியிட்ட அறிக்கையில், பயங்கர தாக்குதல் நிலைமை குறித்து மலேசியா நெருக்கமாக கண்காணித்து வருவதாக கூறியது. இதுவரை மலேசியர்கள் யாரும் அச்சம்பவத்தில் காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டது. மலேசியர்கள் யாரேனும் தாக்குதலில் பாதிக்கப்பட்டிருந்ததால் உடனடியாக அங்குள்ள மலேசிய தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. 

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற பிரபல அமெரிக்க பாடகர் அரீனாகிராண்டேயின் இசை நிகழ்ச்சியில் பயங்கர வெடிகுண்டு வெடித்தது. இதில் 19 பேர் உயிரிழந்தனர். இது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலாக இருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர். தாக்குதல் சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

Advertisement