Latestமலேசியா

24 மணி நேரத்தில் 474 சட்டவிரோத குடியேறிகள் கைது

கோலாலம்பூர், ஜன 3 – கடந்த  24 மணி நேரத்தில்  474 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தாண்டு தொடங்கத்திலிருந்து  நாடு முழுவதிலும்  குடிநுழைவுத்துறை மேற்கொண்ட  124 பரிசோதனை  நடவடிக்கைகளில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களில் 220 இந்தோனேசியர்கள்,  89 சீன பிரஜைகள்  மற்றும்  78 வங்காளதேசிகள், 42 மியன்மார் பிரஜைகள் மற்றும் 22 பிலிப்பினோக்களும் அடங்குவர். எஞ்சியோர் இதர நாடுகளைச் சேர்ந்தவர்களாவர் என   குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குனர் டத்தோ கைருல்  ஸைமி டாவுட் தெரிவித்தார்.
இதனிடையே  சட்டவிரோத குடியேறிகளை  வேலைக்கு  வைத்திருக்கும் முதலாலளிகளுக்கு  எதிராக 1959/1963ஆம் ஆண்டு  குடிநுழைவு சட்டத்திற்கு எதிராக  நடவடிக்கை எடுக்கப்படும் என  கைருல் எச்சரித்தார்.

இதுவரை நான்கு முதலாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மனிதக் கடத்தல் மற்றும் குடியேறிகள் சட்டத்தின் கீழ் முதலாளிகள் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்தார். சட்டவிரோத குடியேறிகள் தாங்களாகவே சரணடைந்து   700 வெள்ளி அபராதம் செலுத்தி தங்களது தாயத்திற்கு திரும்புவதற்கு    “BACK FOR GOOD” எனப்படும்   B4G திட்டத்தில் போதுமான கால அவகாசத்தை  அவர்களுக்கு  குடிநுழைவுத்துறை வழங்கிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் இந்த வாய்ப்பை சட்டவிரோத குடியேறிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதோடு  சில முதலாளிகளும்  இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருந்ததாகவும் கைருல் கூறினார். எனவே அவர்களுக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என  அவர்  எச்சரித்தார்.
டிசம்பர்  31ஆம் தேதியோடு முடிவடைந்த B4G  சுயமாக நாடு திரும்பும் திட்டத்தின் கீழ் சட்டவிரோத குடியேறிகளில் 190,471 பேர் பதிவு செய்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!