Latestமலேசியா

மலேசிய மூத்த கலைஞர் சிவாஜி ராஜா காலமானார்

கோலாலம்பூர், ஜன 16 –  மலேசியாவின்  மூத்த கலைஞர்களில் ஒருவரான  சிவாஜி ராஜா என்ற செல்வராஜ் தனது 77வது வயதில் நேற்று காலமானார். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வானொலி நாடாகங்கள் மற்றும் மேடை நாடகங்களில்  நடித்த ஒப்பற்ற கலைஞராக விளங்கியவர் சிவாஜி ராஜா.

இரத்தப் பேய் நாடாகத்தில் நடித்துள்ள சிவாஜி ராஜா அந்த நாடகத்தை   25 முறை  மலேசிய அரங்கில் மேடையேற்றினார்.  1967ஆம் ஆண்டு   ஏப்ரல் மாதம் சென்னை மியூசிக் திரையரங்கில் 3  நாட்கள் அரங்கேற்றம் கண்ட இரத்தப் பேய் நடாகத்திற்கு அறிஞர் அண்ணா,   கலைஞர் மு.கருணாநிதி நாவலர் நெஞ் செழியன் போன்ற தலைவர்கள் தலைமை தாங்கியுள்ளனர். 

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மலேசிய  திரைப்படமாகவும் இரத்தப் பேய்  அமைந்தது. மேலும்  அனுபவி ராஜா அனுபவி, இலங்கையில் தயாரிக்கப்பட்ட நெஞ்சுக்கு நீதி,  வசந்தத்தில் ஒரு நாள் ,   டிவ்யா ஐ லவ் யூ போன்ற படங்களிலும்  சிவாஜி ராஜா நடித்துள்ளார். மேலும்  மனக்கடல், தெய்வ மகள், முல்லைத் தேர் பாஞ்சாலி சபதம் ஆகிய மேடை நாடகங்களிலும் அவர் நடித்துள்ளார்.

தேசிய திரைப்பட வாரித்தில்  தனிக்கை உறுப்பினராகவும் இருந்த சிவாஜி  ராஜாவுக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். அவரது மகன்களில் ஒருவர் மருத்துவராகவும் மற்றொருவர்  பகுதி நேர விமானியாகவும் உள்ளனர். சிவாஜி ராஜாவின் நல்லுடல் மலாக்காவில் அவரது மகனின் இல்லத்தில் நடைபெற்ற இறுதி சடங்கிற்கு பின் நேற்று பிற்பகலில்  தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவு மலேசிய கலை உலகத்திற்கு பெரும இழப்பு என  மலேசிய சிவாஜி கணேசன் கலைமன்றத்தின்  தலைவரான இயக்குனர் விஜய சிங்கம் தெரிவித்தார்.

அரசாங்கத்தில் புள்ளி விவரத்துறையின் முன்னாள் ஊழியருமான சிவாஜி ராஜா நடிகர் திலகம் சிவாஜி கணேசன்  மீது தீவிர பற்றாளராக விளங்கினார்.  நடிகர் சிவாஜி கணேசனின் வீர பாண்டிய கட்டபொம்மன் வசனங்களை சிறந்த முறையில் பேசியதன் மூலம் சிவாஜி ராஜா என்ற பெயரையும் பெற்றார்.
1962ஆம் ஆண்டு  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மலேசியா வந்தபோது அவருடன் சிவாஜி ராஜா நல்ல தொடர்பையும் ஏற்படுத்திக் கொண்டார். அதோடு சிவாஜி கணேசன் கலைமன்றத்தை அமைத்து அதன் முதல் தலைவராகவும் இருந்து செயல்பட்டார்.  மலேசிய வானொலியில் சமுகம், மர்ம மற்றும் பக்தி நாடாகங்களிலும் தமது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ள சிவாஜி ராஜா இயக்குனர் பிரேம்குமாரின்  ஆலமரம் மேடை நாடாகத்திலும் நடித்து முத்திரையை பதித்துள்ளார்.  இதுதவிர பல மலாய் நாடகங்களிலும் அவர் நடித்துள்ளார்.
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!