Latestமலேசியா

பொங்கல் நிகழ்வுகளில் முஸ்லிம்கள் கலந்துகொள்ளக்கூடாது – ஜாக்கிம் உத்தரவிட்டதா? பரவும் சுற்றறிக்கை

கோலாலம்பூர், ஜன 14 – பொங்கல் நிகழ்வுகளில் முஸ்லிம்கள் கலந்துகொள்ளக்கூடாது என  கடந்த ஆண்டு ஏப்ரல்  8 மற்றும் 9ஆம் தேதி நடைபெற்ற ஜாக்கிம் எனப்படும்  மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத்துறையின்  ஷாரியா நிபுணர் குழு கூட்டத்தில் முடிவு காணப்பட்டதாக கல்வி அமைச்சின்  பள்ளி நடவடிக்கைப்  பிரிவின் துணை தலைமை இயக்குனரும் ஆசிரியர்  பயிற்சி துணை தலைமை பதிவதிகாரியுமான ஹாஜி அட்ஸ்மான் பின் தாலிப் என்பவர்  கையெழுத்திட்ட  சுற்றறிக்கை   சமுக வலைத்தளங்களில் இன்று வெளியாகியுள்ளது.

இந்த உத்தரவை மாநில, மாவட்ட, பள்ளி முதல்வர்கள், தலைமையாசிரியர்கள் போன்ற கல்வி அதிகாரிகள் பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது.பொங்கல் இந்து சமயத்தவர்களின் பண்டிகை என்பதோடு பொங்கல் வைக்கும் நிகழ்வுகளில்  முஸ்லிம்கள் பஙகேற்கக்கூடாது என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அப்படியே முஸ்லிம்கள் கலந்துகொள்வதாக இருந்தாலும் அதில் எந்தவொரு சமய அடையாளங்களை பிரதிபலிக்கும் அம்சங்கள் இருக்கூடாது என்பதோடு மாலை அணிவிப்பதற்கும் தங்களை அனுமதிக்கக்கூடாது என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டது.பள்ளிகளில் ஏற்கனவே ஜாவி மொழி அறிமுகப்படுத்தப்பட்டு அந்த சர்ச்சைக்கு இன்னமும் தீர்வு காணப்படாத நிலையில் இப்போது இப்படியொரு அறிக்கை  வெளியிடப்பட்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் திருநாள் சமய பண்டிகையாக கொண்டாடப்படுவதில்லை. அது உழவர்களுக்கும் உழைப்புக்கும்  துணையாக இருக்கும் இயற்கைக்கு  நன்றி தெரிவிக்கும் ஒரு நாளாக கொண்டாடப்படுகிறது. பல இன மக்களையும் கொண்ட மலேசியாவில் வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பு மற்றும் மலேசியர்களின் கலச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் காலம் காலமாக பொங்கல்   நிகழ்வும் அது தொடர்பான விழாவும்  திகழ்ந்து வருகின்றன.

கடந்த காலங்களில் பொங்கல் வைக்கும் நிகழ்வுகளில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் உட்பட பல தலைவர்களும் கலந்துகொண்டு வந்துள்ளனர்.இதனிடையே இந்த சுற்றறிக்கை உண்மையிலேயே  கல்வி அமைச்சு வெளியிட்டதா அல்லது இது போலியான அறிக்கையா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. இது குறித்து கல்வி அமைச்சிடம் வணக்கம் மலேசியா தொடர்பு கொண்டபோதும்  தொடர்பு கிடைக்கவில்லை.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!