Latestசினிமா

நடிகர் விசு காலமானார்

சென்னை: தமிழ் திரையுலகின்  இயக்குநரும் நடிகருமான விசு உடல் நலக்குறைவால் தனது 75 வயதில் நேற்று காலமானார்.

கடந்த சில நாட்களாக சிறு நீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று  மாலை அவரது உயிர் பிரிந்தது.

விசுவிற்கு உமா என்ற மனைவியும் லாவண்யா, சங்கீதா, கல்பனா ஆகிய 3 மகள்கள் உள்ளனர்.

நடிகர் விசு 1945ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பிறந்தார். அவரது முழுப் பெயர் மீனாட்சி சுந்தரம் ராமசாமி விஸ்வநாதன் ஆகும். சுருக்கமாக விசு என அழைக்கப்பட்டு வந்தார். எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தொகுப்பாளர் என பன்முகங்களை கொண்டவர் விசு.

இயக்குநர் பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து இயக்குநரானவர் விசு. அப்போதே சிறுசிறு கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். விசு நடித்த முதல்படம் ரஜினியின் தில்லு முல்லு படம்தான். மேலும் குடும்பம் ஒரு கதம்பம் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

விசு தொகுத்து வழங்கிய அரட்டை அரங்கம் நிகழ்ச்சி உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் விவாத நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் அவரின் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியே முன்னோடி என கூறலாம்.

நடிகர் ரஜினியுடன் மன்னன், அருணாச்சலம், உழைப்பாளி மிஸ்டர் பாரத், உழைப்பாளி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஏராளமான வெற்றிப்படங்களையும் குடும்பப்படங்களையும் கொடுத்துள்ள விசுவின் மரணம் தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு என திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!