Latestமலேசியா

திராங்கானு சுல்தானின் ஆலோசகராகவும் ஜோ லோ இருந்து வந்தார் – நஜிப் சாட்சியம்

கோலாலம்பூர், டிச 3- 1எம்டிபி உருவாகுவதற்கு முன் அது திரங்கானு முதலீட்டு வாரியம் (TIA) என்ற பெயரில் செயல்பட்டு வந்ததாகவும் அப்போது திராங்கானு  சுல்தானின் ஆலோசகராகவும்  ஜோ லோ இருந்து வந்ததாக எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் வழக்கு விசாரணையில் சாட்சியம் வழங்கியபோது முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் நிதி நிறுவனத்திற்கு சொந்தமான 4 கோடியே 20 லட்சம் வெள்ளியை மோசடி செய்தது உட்பட 7 குற்றச்சாட்டுகளை  எதிர்நோக்கியிருக்கும் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான  வழக்கு விசாரணை 59 ஆவது நாளாக கோலாலம்பூர் நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.
2009ஆம் ஆண்டில் அப்போதைய பேரரசராகவும் இருந்து வந்த திரங்கானு சுல்தான் மிலான் ஜைனால் அவர்களுக்கு  ஜோ லோ மிகவும் நெருக்கமானவராக இருந்து வந்ததாகவும் நஜீப் கூறினார்.
திரங்கானு  சுல்தான் முதலீட்டு TIA வாரியத்தின் தலைவராகவும் இருந்ததால் அந்த வாரியத்தின் ஆலோசகராக ஜோ லோ நியமிக்கப்பட்டதாக நான் புரிந்து கொண்டேன் என தமது சாட்சியம் தொடர்பான அறிக்கையை வாசித்த போது  நஜீப் தெரிவித்தார்.
ஏழு குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தற்காப்பு வாதம் புரியும்படி உத்தரவிடப்பட்டிருக்கும் பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான நஜீப் தமது தற்காப்பு வாதத்தின்போது இதனை தெரிவித்தார். திராங்கானு சுல்தான் மற்றும் மாநில  அரசாங்கத்திற்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து  TIA கோட்பாட்டை தாம் புரிந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று காலை வழக்கு விசாரணை தொடங்கியபோது நஜீப்பின் 743 பக்க அறிக்கையை  மட்டுமே எதிர்தரப்பு வழங்கியிருப்பதாக இந்த வழக்கை விசாரணை செய்து வரும் நீதிபதி முகமட்  நல்லானிடம் அரசு தரப்பு வழக்கறிஞரான சிதம்பரம் தெரிவித்தார்.
நீதிமன்றத்திற்கு வராத நிலையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் வாக்குமூலத்தின் காரணத்தினால் ஏற்றுக் கொள்ளக்கூடிய சாட்சியத்தை அடையாளம் காண்பதற்கு இந்த அறிக்கையை முழுமையாக ஆராய வேண்டும் என  வழக்கறிஞர் சிதம்பரம் கூறியிருந்தார்.
கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததன் காரணத்தினால் மத்திய கிழக்கு நாடுகளிலும் அதிகமான ரொக்கம் இருக்குமென்பதால் அந்நாடுகளிடமிருந்து முதலீட்டு வசதிகளை பெற முடியும் என்று தாம் நம்புவதாகவும் நஜீப் கூறினார்.

இதன் காரணமாகவே ஜோ லோவின் செல்வாக்கு மற்றும் அவரது தொடர்பு 1 எம்.டி.பி.யின் டிவின்டிவியின் முதலீட்டு நோக்கங்களுக்கு நன்மையாக இருக்கும் என தாம் நம்பியதாகவும் அவர் தெரிவித்தார்.
காலை காலை 8.50 மணியளவில்‌ நஜிப் நீதிமன்றம் வந்தபோது அவரது ஆதரவாளர்கள் அவரை வரவேற்றனர். இம்மாதம் 19ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு நஜிப்புக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெறும்.
அரசுத்தரப்புக்கு சட்டத்துறை தலைவர் தோமி தோமஸ் தலைமை ஏற்றுள்ளார். நஜிப்பின் வழக்கறிஞர் குழுவிற்கு  முகமட் ஷாபி  அப்துல்லா தலைமை ஏற்றுள்ளார்.
நஜீப்பிற்கு எதிரான குற்றச்சாட்டில் போதுமான ஆதாரம் இருப்பதால் அவர் தற்காப்பு வாதம் செய்யும்படி ஏற்கனவே கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை இன்று தொடங்கியது.
66 வயதான நஜீப் குற்றவாளிகூண்டில் இருந்தவாறு கேள்விகளுக்கு பதில் அளிப்பார். கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முகமட்  நஸ்லான்  முகமட் கஸாலி  முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெறுகிறது.
கடந்த 2009ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2018 ஆம் மே மாதம் வரை  நஜீப் பிரதமராக இருந்தபோது எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் நிறுவனத்திற்குச் சொந்தமான 4 கோடியை 20 லட்சம் வெள்ளியை மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு ஏழு குற்றச்சாட்டுக்கள் நஜிப் மீது கொண்டுவரப்பட்டன. இவற்றில் நம்பிக்கை மோசடி புரிந்த 3 குற்றச்சாட்டுக்களும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக மற்றொரு குற்றச்சாட்டும் அடங்கும்

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!