Latestஇந்தியாஉலகம்

தாயை கழுத்தறுத்துக் கொன்ற மனநலம் குன்றிய மகன்

சென்னை,  ஜன 13 – மனம் நலம் குன்றிய தனது மகனை மருத்துவமனையில் மீண்டும் சேர்க்க பேசிக்கொண்டிருந்த தனது தாயை கத்தியில் கழுத்தறுத்துக் கொன்ற மகனை போலிசார் கைது செய்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனைத் தடுக்க வந்த தந்தையையும் அவன் கத்தியால் குத்தியுள்ளான். இச்சம்பவம் அவ்வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை முகப்பேர் காளமேகம் தெருவைச் சேர்ந்தவர் 67 வயது ஸ்ரீராமுலு என்பவர்  தள்ளுவண்டியில் உணவு கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு 37 வயது வரதராஜுலு மற்றும் 35 வயது வீரராகவன் என 2 மகன்கள் உள்ளனர்.

இவர்களில் வரதராஜுலு தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். வீரராகவன், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவ்வப்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் கூறப்பட்டது.

நேற்று இரவு வீரராகவனை மீண்டும் சிகிச்சைக்காக மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது குறித்து அவரிடம் ஜெயலட்சுமி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வீரராகவன், வீட்டின் கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டு, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து தனது தாயின் கழுத்தில் வைத்து, தன்னை மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்ப கூடாது என்று மிரட்டினார்.

மகனின் செயலால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீராமுலு மற்றும் அக்கம்பக்கத்தினர் கதவை திறக்கும்படி கூறினர். இதுபற்றி தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் வழங்கப்பட்டு அவர்களும் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது திடீரென, வீரராகவன், தனது கையில் இருந்த கத்தியால் ஜெயலட்சுமியின் கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தினார். இதை தடுக்க வந்த தந்தை ஸ்ரீராமுலுவின் தலையிலும் கத்தியால் குத்தினார்.

அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் வீரராகவனை பிடித்து வைத்தனர். ஜெயலட்சுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிபடுத்தினர். தற்போது, ஸ்ரீராமுலு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையான ஜெயலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வீரராகவனிடம் விசாரித்து வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!