Latestஇந்தியாஉலகம்

சைக்கிளை சரி செய்ய இவ்வளவு நாளா? அதிருப்தியில் போலிசில் புகார் செய்த சிறுவன்

கேரளா, நவ 29 – பழுதான தனது மிதிவண்டியை சரிசெய்ய கொடுத்த கடையில் கால தாமதம் செய்ததால் ஆத்திரமடைந்த 10 வயது சிறுவன் ஒருவன் போலிசில் புகார் அளித்துள்ளான். இச்சம்பவ்ம் கேரளா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

சைக்கிள் கடைக்காரரின் சேவையில் அதிருப்தி அடைந்த அபின் எனும் அச்சிறுவன் தான் கைப்பட எழுதிய புகார் கடிதம் ஒன்றையும் எடுத்துக் கொண்டு மெப்பாயூர் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளான்.

நவம்பர் 25ஆம் திகதி எழுதப்பட்ட அப்புகார் கடிதத்தில், கோழிகோடு எலாம்பிலாட் ஆரம்பப்பள்ளியில் பயிலும் தாமும் தனது தம்பியும் கடந்த நவம்பர் 5ஆம் திகதி எங்களின் மிதிவண்டியை பழுதுபார்க்க சம்பந்தப்பட்ட அந்தக் கடைக்கு எடுத்துச் சென்றோம். அதனை சரி செய்ய எங்களிடமிருந்து 200 ரூபாயை பெற்றுக் கொண்டனர் (ரிம11). ஆனால் அதன் பிறகு ஒவ்வொரு முறையும் அந்த கடைக்கு தொடர்புக் கொண்டு கேட்கும் போது மிதிவண்டி இன்னும் பழுதுபார்க்கப்படவில்லை என்று கூறுவார்கள் அல்லது அழைப்பை எடுக்க மாட்டார்கள்” என கூறப்பட்டிருந்தது. மேலும் அந்த கடை பெரும்பாலான நேரங்களில் திறந்திருப்பதில்லை எனவும் அந்த புகார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எங்களுக்காக அடிக்கடி அந்த கடையில் சென்று பார்க்க யாரும் இல்லை என்பதால், போலிசாரின் உதவியை நாடியிருப்பதாகவும், எங்களின் மிதிவண்டியை மீட்டுத் தரும்படியும் சிறுவன் அபின் அந்த புகாரில் தெரிவித்திருந்தான்.
சிறுவர்களின் புகாரை கருத்தில் எடுத்துக் கொண்ட போலிசார், சம்பந்தப்பட்ட அந்த கடையில் சென்று விசாரித்தபோது, கடை உரிமையாளர் தனக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவினாலும் மேலும் தன் மகனின் திருமண ஏற்பாட்டில் ஈடுபட்டிருப்பதாலும்தான் மிதிவண்டியை பழுது பார்க்க முடியாமல் போனதாக கூறியுள்ளார். கூடிய விரைவில் அச்சிறுவனின் மிதிவண்டியை சரிபார்த்து கொடுத்து விடுவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்.
இந்நிலையைல், இந்த புகார் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்த போலிசார், அச்சிறுவனின் மிதிவண்டி சரிபார்க்கப்பட்டு அபினிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக கூறியிருந்தனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!