Latestமலேசியா

சிலாங்கூர் தமிழ் பள்ளியின் முன்னாள் அமைப்பாளர்  டேனியல் அமல்தாஸ் காலமானார்

கோலாலம்பூர்,  ஜன 20 – சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் அமைப்பாளரும் ஜெராம்  புக்கிட் செராக்கா தமிழ் பள்ளியின் தலைமை ஆசிரியருமான டேனியல்  அமல்தாஸ்  (வயது 56)  நேற்று காலமானார்.

கடந்த சில நாட்களாக உடல்நலமில்லாமல் சுங்கை பூலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டேனியல் நேற்று மாலை மணி 6.30  அளவில் இறந்தார். அவருக்கு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

கோலா சிலாங்கூர் வட்டாரத்தில் பிறந்து வளர்ந்த அவர் வாகீசர் தமிழ்ப்பள்ளியில் தொடக்கக் கல்வியை பெற்றார். ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் இருந்து வெளியேறிய பின்னர் காப்பார்  மெதடிஸ்ட் தமிழ் பள்ளி மற்றும் வாகீசர் தமிழ் பள்ளியிலும்  அவர் ஆசிரியராக பணியாற்றினார். பின்னர்  பத்தாங் பெர்ஜுந்தை சுங்கை ரம்பை மற்றும்  சுங்கை திங்கி தமிழ் பள்ளியில் தலைமையாசிரியராக டேனியல் பணியாற்றியுள்ளார்.

2009 ஆம் ஆண்டு அவர் சிலாங்கூர் ‌மாநில தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.  ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் டேனியல் மாவட்ட, தேசிய மற்றும் மாநில ரீதியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்று மற்ற ஆசிரியர்களின் பாராட்டுகளையும் பெற்றவர்.

கடந்த ஆண்டு இறுதிவரை தமிழ் பள்ளி அமைப்பாளராக பணியாற்றிய காலத்தில் சிலாங்கூர் மாநில மாணவர்கள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் மட்டுமின்றி புறப்பாட நடவடிக்கைகளிலும் மேம்பாடு காண்பதற்கு பல்வேறு ஆக்கபூர்வமான செயல் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

குறிப்பாக  யூ.பி.எஸ். ஆர்  தேர்வில் சிலாங்கூர்  மாநில தமிழ்ப்பள்ளிகள் சிறந்த அடைவுநிலை பெறுவதற்காக  தலைமை ஆசிரியர்கள்,  பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் அரசு சார்பற்ற இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றினார்.

No 11,  Lorong Teratai 2/16, Bandar Baru, Kuala Selangor என்ற முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!