Latestமலேசியா

சிறிய – நடுத்தர தொழில் துறைக்கு 2 பில்லியன் ரிங்கிட் வழங்குவீர் – 1MINE இயக்கம் வலியுறுத்து

கோலாலம்பூர், மார்ச் 26 – நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவுக்கு முன்னதாக செயல்பட்டு வந்த சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கு சிறப்பு நிவாரண நிதியாக 2 பில்லியன் ரிங்கிட் வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என 1MINE எனப்படும் மலேசிய இந்திய தொழில் முனைவர்கள் சங்கம் கேட்டுக் கொண்டது.
கோவிட்-19 வைரஸ் தொற்றினால் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் இந்த காலகட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறைகள் தொடர்ந்து செயல்படுவதற்கு இந்த சிறப்பு ஒதுக்கீட்டை நிதி அமைச்சு கடன் நிவாரண நிதியாக அறிமுகப்படுத்த வேண்டும் என 1MINE அமைப்பின் தலைவர் டத்தோ எஸ். கோபிநாத் கோரிக்கை விடுத்தார்.
புதிதாக பதிவு செய்த சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கு கடன் நிவாரணம், சிறப்பு ஊக்குவிப்பு அல்லது விலக்களிப்பு ஆகியவற்றை நிதியமைச்சு அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதுதவிர நிதி நிறுவனங்களும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கு தங்களது வர்த்தக கடன்களை உதவித் தொகையாக உருமாற்ற முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மார்ச் 30ஆம் தேதி அறிவிக்கப்படவிருக்கும் முழுமையான பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் மற்றும் மக்கள் உதவிக்கான திட்டத்தில் நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு சிறப்பு ஊக்குவிப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை இருப்பதால் இது அவசியம் தேவை என கோபிநாத் வலியுறுத்தினார்.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறைகள் தவிர்க்கமுடியாத இழப்பை எதிர்நோக்கக்கூடும் என்பதால் அவை தொடர்ந்து நீடித்து இருப்பதற்கு
நாம் உதவ வேண்டும். சிறிய நடுத்தர தொழில்துறையை பாதுகாப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு நிலம் போன்ற ஊக்குவிப்புகளையும் ஒதுக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். இது தவிர இந்தத் துறைகளில் பணியாற்றுவதற்கு வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அமல்படுத்தப்பட்ட தடையையும் அரசாங்கம் நீக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கோவிட் 19 வைரஸ் பரவியதால் காய்கறி விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் காய்கறிகள் பயிரிடுவதை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் காய்கறிகள் பயிரிடவதற்கு அவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என கோபிநாத் வேண்டுகோள் விடுத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!