Latestஉலகம்விளையாட்டு

உபர் கிண்ண பேட்மிண்டன் போட்டிக்கு மலேசிய மகளிர் குழு தகுதி

மணிலா, பிப் 14  – இவ்வாண்டு மே மாதம் டென்மார்க்கில் நடைபெறவிருக்கும் உபர் கிண்ண பேட்மிண்டன் போட்டிக்கு மலேசிய மகளிர் பேட்மிண்டன் குழு தகுதி பெற்றது. இன்று மணிலாவில் நடைபெற்ற ஆசிய மகளிர் குழு பேட்மிண்டன் போட்டியில் தைவான் குழுவை காலிறுதியாட்டத்தில் 3-1 என்ற ஆட்டக்கணக்கில் வீழ்த்தியதன் மூலம் மலேசியக் குழு உபர் கிண்ணப் போட்டிக்கு தகுதி பெற்றது.

மலேசிய குழுவுக்கான வெற்றிப் புள்ளியை பியர்லி டான் – எம். தீனா இரட்டையர் ஆட்டத்தில் 18-21, 21-17, 21-18 புள்ளிக் கணக்கில் தைவானின் செங் சீ யா – லியு சியாவுன் ஜோடியை வீழ்த்தி முக்கியமான வெற்றிப் புள்ளியை பெற்றுத் தந்தனர். இதற்கு முன்னர் சோனியா சியாவும், முன்னாள் ஜூனியர் சாம்பியன் கோ ஜின் வெய்யும் இரண்டு ஒன்றையர் ஆட்டங்களில் வெற்றிப் பெற்று மலேசியாவுக்கு 2 வெற்றிப் புள்ளிகளை தேடித் தந்தனர்.

அடுத்து நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் மலேசிய குழுவினர் நடப்பு உபர் கிண்ண சாம்பியன் ஜப்பானுடன் மோதவிருக்கின்றனர். மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் தாய்லாந்து குழு தென் கொரியாவுடன் மோதவிருக்கிறது. இதனிடையே நாளை நடைபெறும் அரையிறுதியாட்டத்தில் மலேசிய குழுவினர் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தினால் ஜப்பானை வீழ்த்த முடியும் என தேசிய மகளிர் பேட்மிண்ட்ன் குழுவின் பயிற்சியாளரான டத்தோ தே சியு போக் கூறினார்.

முன்னோடிச் சுற்றில் ஜப்பான் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் மலேசியாவின் ஒற்றையர் ஆட்டக்காரர்களான சோனியா சியாவும், எஸ்.கிஷோனாவும் மிகவும் அற்புதமாக விளையாடி மலேசியாவுக்கு இரண்டு வெற்றிப் புள்ளிகளை பெற்றுக் கொடுத்ததை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது என தே சியு போக் தெரிவித்தார். உலகின் மூன்றாம் நிலை ஆட்டக்காரரான அக்கானோ யமாகுச்சியை 21-16., 13-21,18-21 என்ற புள்ளிக் கணக்கில் மலேசியாவின் சோனியா வீழ்த்திய வேளையில் கிஷோனா 21 -14. 21-13 என்ற புள்ளிக் கணக்கில் உலகின் 19ஆம் நிலை ஆட்டக்காரரான அயா ஹோரியை வீழ்த்தி சாதனையை ஏற்படுத்தினார். ஜப்பானிய குழுவிடம் தோல்வி கண்டாலும் நமது குழுவினர் அவர்களுக்கு ஈடுகொடுத்து விளையாடியது பாராட்டக்கூடிய ஒன்று என தே சியு போக் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!