
கோலாலம்பூர், டிச 3 – நாடாளுமன்றத்தில் இந்துக்களின் நம்பிக்கையை சிறுமைப்படுத்திய தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென மலேசிய இந்து சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் நெற்றியில் வைத்திருந்த விபூதியை மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் தலைவர் சின் பெங்கின் அஸ்தியா என தாஜுடின் குறிப்பிட்டது இந்துக்களின் மனதை புண்படுத்தி இருப்பதாக மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் மோகன் ஷான் கூறியுள்ளார்.
புனிதமான விபூதியை கேலி செய்யும் வகையில் தாஜுடின் வெளியிட்டிருக்கும் கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தி இருப்பதாகவும் இதற்காக அந்த தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என மோகன் ஷான் வலியுறுத்தினார்.
ஆகம முறைப்படி விபூதி தயாரிக்கப்படுகிறது. நெற்றியில் விபூதி அணிவது இந்துக்களின் தெய்வீக நம்பிக்கையாகும். ஒருவரின் தெய்வ நம்பிக்கையை கேலி செய்யும் வகையில் தாஜுடின் கேள்வி எழுப்பி இருப்பது வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மற்றவர்களின் சமய நம்பிக்கை மற்றும் அவர்களது உணர்வை தாஜுடின் புரிந்து கொள்ள வேண்டும். இது குறித்து கேலி செய்யும் வகையில் கருத்துரைத்த அவர் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மோகன் ஷான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்