Latestவிளையாட்டு

ஆசிய குழு பேட்மிட்டன் போட்டி கிஷோனா – தீனா தேர்வு

கோலாலம்பூர் ஜன 25 அடுத்த மாதம் மணிலாவில் நடைபெறவிருக்கும் ஆசிய குழு சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் மலேசிய குழுவிற்கு மகளிர் ஒற்றையர் பிரிவில் எஸ் கிஷோனா  மற்றும் இரட்டையர் பிரிவுக்கு எம்.தீனாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்தாண்டு நடைபெற்ற சீ போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற கிஷோனாவுடன் தேசிய பேட்மிண்டன் விளையாட்டாளர்களான கோ ஜின் வெய், சோனியா சியா, சூன் ஷி சுவான்   ஆகியோரும் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கு  தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இரட்டையர் பிரிவில்  தீனாவுடன் பியர்லீ டான்,  லீ மெங் யென் -சௌ மெய் குவான்  ஜோடி , விவியன் ஹொ, யாப்செங் வென் ஜோடி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சீ போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற லீ சீ ஜியா உட்பட  நால்வரும் இரட்டையர் பிரிவில் மூன்று ஜோடிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் குழு போட்டியில் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவில் முதல் 4 இடங்களைப் பெறும் குழுக்கள் எதிர்வரும் மே மாதம்  16ஆம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை டென்மார்க்கில் நடைபெறவிருக்கும் தாமஸ் மற்றும் உபர் கிண்ண பேட்மிண்டன் போட்டியின் இறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

ஆசிய குழு பேட்மின்டன் போட்டியில் ஜப்பான், சீனா, தென் கொரியா , இந்தோனேசியா தாய்லாந்து, தைவான், இந்தியா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.

இவற்றில் ஜப்பான், சீனா ,தென்கொரியா மற்றும் இந்தோனேசியா ஆகிய அணிகள் மலேசிய  குழுவிற்கு மிரட்டலாக விளங்கக்கூடும் என மலேசிய பேட்மின்டன் குழுவின் பயிற்சிக்  குழு இயக்குனர் வொங் சுங் ஹான் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!