Latestமலேசியா

அன்வார் பிரதமர் ஆவதற்கான தேதி எதுவும் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை – சைபுடின்

கோலாலம்பூர், ஜன 3 – அடுத்த பிரதமர் அன்வார்தான் என்பதில் எந்தவொரு நெருக்கடியும் கிடையாது. ஆனால் இதற்கான தேதிதான் இன்னும் முடிவு செய்யப்படவில்லையென நம்பிக்கை கூட்டணியின் தலைமை செயலாளர் சைபுடின் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை கூட்டணி தனது தேர்தல் கொள்கை அறிக்கை வாக்குறுதியை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என  நிக் நஸ்மி கூறியிருப்பதையும் சைபுடின் ஏற்றுக்கொண்டார்.இவ்வாண்டு  மே மாதம் 10ஆம் தேதி வந்தால் பிரதமர் டாக்டர் மகாதீர்  இரண்டாவது முறையாக பதவிக்கு வந்து  இரண்டு ஆண்டுகள் நிறைவாகிவிடும். எனவே   அதிகாரப் பரிமாற்றத்திற்கான நடவடிக்கைகளை நம்பிக்கை கூட்டணி முன்னெடுக்க வேண்டும் என பி.கே.ஆர் கட்சியின்   நாடாளுமன்ற உறுப்பினரான   நிக் நஸ்மி நிக்  அகமட் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதிகாரப் பரிமாற்ற விவகாரத்தை   நம்பிக்கை கூட்டணியின்  தலைவர் மன்றத்திடம் விட்டுவிட வேண்டும் என  சைபுடின் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக நம்பிக்கை கூட்டணியின் தலைவர் மன்றத்தில் விவாதிக்கப்பட்டு ஒருமித்த கருத்துடன் இணக்கம் காணப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இவ்வாண்டு நவம்பர் மாதம்  கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும்  ஆசிய பசிபிக்  பொருளாதார ஆலோசனை மன்றமான ஏபெக் மாநாட்டிற்குப் பின்  தமது பிரதமர் பதவியை  அன்வாரிடம் ஒப்படைக்கப்போவதாக  டாக்டர் மகாதீர்  டிசம்பர்  10ஆம் தேதி கூறியிருந்தார். எனினும் அன்வாரிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது என்பதற்கான தேதி எதனையும் மகாதீர் இதுவரை அறிவிக்கவில்லை.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!