
கோலாலம்பூர், டிச 2 – பி.கே.ஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிமை சிறப்பு பணிகளுக்கான அமைச்சராக நியமிக்க முடியும். அன்வாரின் பங்கை பரிசோதிப்பதற்கு இது பொருத்தமான நேரமாகும் என மூத்த ஊடகவியலாளரான காடிர் ஜாசின் கூறினார்.
கடந்த மாதம் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணி தோல்வி கண்டதை தொடர்ந்து அமைச்சரவை மாற்றம் செய்வதற்கு பிரதமர் முடிவு செய்திருப்பதால் அன்வாரை சிறப்பு பணிகளுக்கான அமைச்சராக நியமிக்க வேண்டும் என்ற தமது சிந்தனையை காடிர் ஜாசின் வெளியிட்டார்.
இதற்கு முன்னர் அமைச்சரவை உறுப்பினராகுவதற்கு தாம் மனுச் செய்ய விரும்பவில்லை என அன்வார் நகைச்சுவையாக கூறியிருந்தாலும் சிறப்பு பணிகளுக்கான அமைச்சராக அவரை பிரதமர் கொண்டுவரலாம் என தமது அகப் பக்கத்தில் பதிவேற்றம் செய்த கட்டுரையில் காடிர் ஜாசின் தெரிவித்தார்.
அரசியல் சர்ச்சையை குறைத்துக்கொண்டு நாட்டை நிர்வகிப்பதில் கவனம் செலுத்துவதற்கு இது சிறந்த ஒன்றாக இருக்கும் என டாக்டர் மகாதீரின் ஊடக மற்றும் தொடர்பு பிரிவுக்கான ஆலோசகருமான காடிர் ஜாசின் கூறினார்.