Latestமலேசியா

அன்வாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் – பிகேஆர்  போட்டி தரப்பு திட்டம்

கோலாலம்பூர், டிச 1 – பி கே ஆர் இளைஞர் பிரிவின் போட்டி தரப்பைக் கொண்ட குழுவொன்று கட்சி தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவதற்கு திட்டமிட்டுள்ளது.

இளைஞர் பிரிவைச் சேர்ந்த சில உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்கம் செய்யும் நடவடிக்கையை பிகேஆர் துணைத் தலைவர்  மற்றும் அவரது தலைமையிலான தரப்பினர் நிராகரித்த பின்னர் அன்வாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டது.‌ அதோடு கட்சி உறுப்பினர்களை நீக்கியதற்காக அன்வார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் போட்டி தரப்பு கோரிக்கை விடுத்தது.

அஸ்மின் தலைமைத்துவத்தை ஆதரிக்கும் தரப்பினரை  ஓரம் கட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் இப்போதைய நடவடிக்கைதான் கட்சியின் மோசமான  பிளவுக்கு காரணமென லெம்பா பந்தாய் பி.கே.ஆர் இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் நஸ்ரின் இட்ஹாம் ரசாலி கூறினார்.

பி கே ஆர் கட்சியைச் சேர்ந்த பல அமைச்சர்களும்  துணை அமைச்சர்களும் தங்களது கடமையை முழுமையாக நிறைவேற்ற முடியாததற்கு இதுவும் ஒரு காரணம் என அவர் சொன்னார்.

கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப அன்வாரின் செயல்பாடு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். அன்வார் தம்மை எட்டாவது பிரதமராக முன் நிறுத்துவதில் தான் கூடுதல் கவனம் செலுத்துகிறார் என்றும் அவரது நடவடிக்கையினால் தாங்கள் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் நஸ்ரின் தெரிவித்தார்.

இதனிடையே அன்வாருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையில் அஸ்மின் ஆதரவாளர்கள் ஈடுபட்டால் அஸ்மினை கட்சியிலிருந்து நீக்குவது குறித்து பரிந்துரை செய்யப்படும் என அன்வார் தரப்பைச் சேர்ந்த தலைவர் ஒருவர் கூறினார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!