ஜாகிர் நாயக்கிற்கு எதிராக மீண்டும்  இந்தியா கைது உத்தரவு! 

India
Typography

 கோலாலம்பூர், ஏப்ரல்,21- பயங்கரவாதச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் பேரில் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக ஜாமீனில் பெறமுடியாத வகையிலான கைது உத்தரவை இந்தியச் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இவருக்கு எதிராக ஏற்கெனவே மூன்று முறை நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ள போதிலும், அவர் அவ்வாறு ஆஜராகத் தவறிவிட்டதாக சிறப்பு நீதிமன்றத்தில் இந்திய புலனாய்வு நிறுவனமான என்ஐஏ தெரிவித்தது.

ஜாகிர் நாயக்கை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவர இண்டர் போலின் உதவி தேவைப்படுவதாகவும் அது கூறியது. கடந்த ஆண்டில் இவருக்கு எதிராக சட்டவிரோதச் செயல்பாடுகள் தொடர்பான சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சவுதி அரேபியாவில் தங்கி செயல்பட்டுக் கொண்டிருப்பதாக நம்பப்படும் ஜாகிர் நாயக்கை அந்நாட்டுக்கு வெளியே அவரது நடமாட்டத்தைத் தடுக்க இண்டர்போல் மூலம் அவரைக் கைது செய்வதற்கு இந்திய அரசாங்கம் முயன்று வருகிறது.

சட்டவிரோதப் பணப் புழக்கக் குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிராக கடந்த வாரத்தில், மற்றொரு இந்திய நீதிமன்றம் ஜாமீன் பெறமுடியாத கைது உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

கடந்த ஆண்டு டாக்காவில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணையின் போது அதில் சம்பந்தப்பட்ட சில தீவிரவாதிகளின் பின்னணியில் ஜாகிர் நாயக்கிற்கு சம்பந்தம் இருப்பதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் கைதாவதில் இருந்து தப்பிக்க இவர் தலைமறைவாகி விட்டார்.

அண்மைய சில தினங்களுக்கு முன்பு மலேசியாவிலுள்ள ஒரு அமைப்பு ஜாகிருக்கு வழங்கிய விருதினை அவர் கோலாலம்பூரில் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே ஜாகிருக்கு நிரந்தர வசிப்பிட உரிமையை மலேசியா வழங்கி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS