துணை அதிபர் தேர்தல்: அதிக வாக்குகள் பெற்று வெங்கையா நாயுடு சாதனை!

பிற மாநிலங்கள்
Typography

டெல்லி, ஆக.6 - துணை அதிபர் தேர்தலில் 30 ஆண்டுக்குப் பின்னர் அதிக வாக்குகள் பெற்று சாதனை படைத்துள்ளார் வெங்கையா நாயுடு. துணை அதிபர் தேர்தலில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட வெங்கையா நாயுடு 516 வாக்குகளையும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட கோபாலகிருஷ்ண காந்தி 272 வாக்குகளையும் பெற்றனர். துணை அதிபர் தேர்தலில் 30 ஆண்டுக்குப் பின்னர் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார் வெங்கையா நாயுடு.

இத்தேர்தலில் 786 எம்பிக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்ற நிலையில் 771 பேர் அதாவது 98.21% வாக்குகள் பதிவாகின. 15 எம்.பி.க்கள் வாக்களிக்கவில்லை.

11 எம்.பி.க்களின் வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. வாக்களிக்காத 15 எம்.பி.க்களில் 3 பேர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்தவர்கள்.

முஸ்லிம் லீக் கட்சியின் 2 எம்.பி.க்கள், திரிணாமுல் காங்கிரஸின் 4 எம்.பி.க்கள், காங்கிரஸ் கட்சியின் 2 எம்.பி.க்கள், தேசியவாத கட்சி எம்.பி. ஒருவர் வாக்களிக்கவில்லை. 

பாஜகவின் விஜய் கோயல், சன்வர்லால் ஜாட் ஆகியோர் மருத்துவமனையில் இருந்ததால் வாக்களிக்கவில்லை. பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸும் தேர்தலில் வாக்களிக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் 20 எம்.பி.க்களும் வெங்கையா நாயுடுவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இத்தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கையா நாயுடு, நான் ஒருபோதும் நாட்டின் துணை அதிபராவேன் என நினைத்துப் பார்த்தது இல்லை. ராஜ்யசபா தலைவர் என்ற முறையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படுவேன் என கூறினார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS