துணை ஜனாதிபதி தேர்தல்: நாடாளுமன்ற வளாகத்தில் 790 எம்.பிக்கள் இன்று வாக்களிப்பு!

பிற மாநிலங்கள்
Typography

டெல்லி, ஆக.5- நாட்டின் 15-வது துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறையில் 790 எம்.பி.க்கள் இன்று வாக்களிக்கின்றனர். துணை ஜனாதிபதியாக ஹமீன் அன்சாரி 10 ஆண்டுகளாகப் பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக் காலம் முடிவடைந்ததால் தேர்தல் நடைபெறுகிறது.

துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜாகவின் வேட்பாளராக வெங்கையா நாயுடுவும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மகாத்மா காந்தியின் பேரனும் முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி போட்டியிடுகின்றனர். 

துணை ஜனாதிபதியை லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.க்கள் வாக்களித்து தேர்வு செய்வர். லோக்சபாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 543 எம்.பிக்கள் மற்றும் 2 நியமன எம்.பி.க்கள் உள்ளனர்.  

ராஜ்யசபாவில் எம்.எல்.ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 233 எம்.பி.க்களுடன் 12 நியமன எம்.பிக்கள் உள்ளனர். மொத்தம் 790 எம்.பி.க்கள் வாக்களித்துதான் துணை ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவர். 

துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது. இதற்காக நாடாளுமன்ற வளாகத்தில் தனி அறை அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச் சீட்டு மூலம்ம் அனைவரும் வாக்களிப்பர். மாலை 5 மணிவரை இந்த வாக்குப் பதிவு நடைபெறும்.

வாக்கு பதிவு முடிவடைந்த உடனேயே வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்படும். இதனால் இன்று மாலையே துணை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

தற்போதைய நிலையில் நாடாளுமன்றத்தில் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் 550 பேர் உள்ளனர். இதனால் வெங்கையா நாயுடு துணை ஜனாதிபதி தேர்தலில் வெல்வது உறுதி.

BLOG COMMENTS POWERED BY DISQUS