பாட்னா, நவ.17- உத்தரபிரதேசத்தில் ஜான்சி நகரில் கணவனின் தொல்லையால் பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்து இருக்கிறார். விசாரணைக்கு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன் அங்கேயே காதல் பாடல் ஒன்றை பாடி மனைவியை சமாதானப்படுத்தி உள்ளார். இதன் காணொளி தற்போது இணையத்தில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

உத்திரபிரதேச மாநிலம் ஜான்சியில் இருந்த அந்த பேமஸ் கணவன் மனைவிக்கு இடையில் சில நாட்களுக்கு முன்பு சண்டை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவரது மனைவி தனது சொந்த வீட்டுக்கு கோபமாக சென்று இருக்கிறார். 

கணவன் எத்தனை முறை வந்து சமாதானம் செய்தும் அவர் திரும்ப வராமல் இருந்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் திடீர் என்று ஜான்சியில் இருக்கும் போலீஸ் நிலையத்திற்கு சென்று தன் கணவன் மீது புகாரும் அளித்து இருக்கிறார். இந்த நிலையில் போலீசார் இருவரையும் விசாரணைக்கு அழைத்தனர். போலீஸ் அந்த கணவனை திட்டிக் கொண்டு இருக்கும் போதே அவர் திடீர் என்று பாடல் ஒன்றை பாட ஆரம்பித்தார்.

"ஜீனா ஜீனா'' என்ற காதல் பாடலை அந்த கணவர் பாடினார். இதன் பொருள் ''என்னை உன்னை விட்டு வாழ முடியாது'' என்பதாகும். அவர் இந்த பாடலை தனது மனைவியை பார்த்து பாடினார். இந்த பாடலை கேட்டதும் அந்த பெண் அழ தொடங்கிவிட்டார். இதையடுத்து அந்த பெண் கணவன் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்கினார். தற்போது அந்த கணவர் 'ஜான்சி நகர் கணவர்' என சோஷியல் மீடியாவில் வைரல் ஆகியிருக்கிறார்.

புதுடில்லி, நவ.15- அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் இந்தியர்களுக்கான விசா விதிமுறைகளை எளிமைப்படுத்துவதாகவும் குறுகிய நாட்களில் பல முறை செல்லக்கூடிய விசா வழங்க உள்ளதாகவும் ஜப்பான் தெரிவித்துள்ளது. 

ஜப்பான் அரசின் விசா எளிமைப்படுத்துதல், அடிக்கடி ஜப்பான் செல்லும் இந்தியர்கள் மற்றும், தொழிலபதிர்கள், சுற்றுலாப்பயணிகளுக்கு பயனளிக்கும் என்று  இந்தியாவில் உள்ள ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து ஜப்பான் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கடந்த ஒர் ஆண்டில் அதிகபட்சமாக இரண்டு முறை ஜப்பான் சென்றவர்களுக்கு 5 ஆண்டுகள் செல்லத்தக்க மற்றும் 90 நாட்கள் ஜப்பானில் தங்கி கொள்ளும் வகையிலான புதிய விசா எடுத்து கொள்ளலாம். இந்த புதிய விதிகள் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிகர்களுக்கு உதவியாக இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எளிமைப்படுத்தப்பட்ட விசா விதிமுறைகளின் படி, விசா விண்ணப்ப ஆவணங்களில், பலமுறை பயணிக்கும் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது, வேலைவாய்ப்பு சான்றிதழ் மற்றும் விளக்க கடிதம் ஆகிய இரண்டுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பலமுறை நுழைவு விசாவுக்கு விண்ணப்பிக்கையில், பாஸ்போர்ட் விசா படிவம், நிதி திறன்(சுற்றுலா செல்பவர்களுக்கு), நிறுவனங்களுடன் தொடர்புடையதற்கான உறுதி ஆவணங்கள் (வணிக நோக்கில் செல்பவர்களுக்கு) ஆகியவற்றை வழங்கினால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில், ஜப்பானுக்கு ஒருமுறை பயணிக்கும் இந்திய மாணவர்களுக்கு, விசா விண்ணப்ப விதிமுறைகளை எளிமைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மும்பை, நவ.14- மும்பையில் 25 அடி சுரங்கப்பாதை தோண்டி ஒரு தேசிய வங்கியில் இருந்த 30 லாக்கர்களை உடைத்து சுமார் 40 லட்சம் மதிப்புள்ள பொருட்களை ஒரு கொள்ளை கும்பல் திருடிச்சென்றுள்ளது. மராட்டிய மாநிலம் நவிமும்பை அருகில் ஜுனிநகர் பகுதியில் பரோடா வங்கிக்கு சொந்தமான ஒரு கிளை அமைந்துள்ளது. இந்த வங்கி இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்னர் மீண்டும் நேற்று திறக்கப்பட்டது. 

அப்போது அந்த வங்கியின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ள சில பாதுகாப்பு பெட்டகங்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அருகில் இருந்த கடையில் இருந்து வங்கியின் பாதுகாப்பு பெட்டக அறை வரையில் சுமார் 25 அடி தூரத்திற்கு சுரங்கப்பாதை தோண்டி திருடர்கள் கொள்ளையடித்து சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர். 

இந்த கொள்ளை சம்பவத்தில் வங்கியில் உள்ள 225 லாக்கர்களில் 30 லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த சம்வத்தில் திருடுபோன பொருட்களின் சரியான மதிப்பு குறித்து இன்னும் கணக்கிடப்படவில்லை. அந்த வங்கியில் உள்ள கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமாவில் பார்ப்பதுபோல் சுரங்கப்பாதை தோண்டி வங்கி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஹைதராபாத், நவ.13- குடிகாரர்களை பிடிப்பதற்காக தெலுங்கானா போலீஸ் சிறிய ரக 'டிரோன்' விமானங்களை பயன்படுத்த முடிவு செய்து இருக்கிறது. இது போலீஸ் செல்ல முடியாத இடங்களுக்கு கூட சென்று குடிகாரர்களை கண்டுபிடிக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

நான்கு இறக்கைகள் இருக்கும் 'டிரோன்' என அழைக்கப்படும் சிறிய ரக விமானங்கள் தற்போது நிறைய தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக குடிகாரர்களை பிடிப்பதற்காக இந்த விமானங்களை தெலுங்கானா போலீஸ் பயன்படுத்த இருக்கிறது.

இந்த திட்டத்தின் படி தெலுங்கானா முழுக்க 200க்கும் அதிகமான 'டிரோன்' விமானங்கள் வானத்தில் பறக்க விடப்படும். பெரும்பாலும் குடிகாரர்கள் இருக்கும் பகுதி என சந்தேகிக்கப்படும் இடங்களில் இந்த விமானங்கள் பறக்கவிடப்படும். இது அரை மணி நேரத்தில் 5 கிமீ பகுதியை எளிமையாக சோதனை செய்யும். மேலும் இதில் மிகவும் துல்லியமான 20 எம்.பி கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது.

இதற்காக போலீஸ் கட்டுப்பட்டு அறையில் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். இது சோதனை முயற்சியிலேயே சரியாக குடிகாரர்களை கண்டுபிடித்தது. இந்த வாரத்தில் இருந்து இந்த சோதனை முறை நடைமுறைக்கு வரும் என போலீசார் கூறியுள்ளனர்.

பீகார், நவ.6- பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் உள்ள மாஸ்டனா காட் என்ற இடத்தில் உள்ள மலைப்பகுதிக்கு சிறுவர்கள், பெண்கள் உள்பட சுற்றுலா பயணிகள் 11 பேர் வந்தனர்.

அவர்கள் அங்கு கங்கை நதியையொட்டி உள்ள சிறிய மலையில் ஏறி கேளிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு சிறுவன் கால் இடறி நதியில் விழுந்தான். இதையடுத்து அவனை காப்பாற்றுவதற்காக அவனுடன் வந்திருந்த அனைவரும் நதியில் குதித்தனர்.

ஆனால் துரதிருஷ்டவசமாக அவர்களில் 9 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். 2 பேர் மாயமாகி விட்டனர். அவர்களை மீட்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

 

புதுடில்லி, நவ.2- ஆசியாவின் பணக்காரர்களுக்கான பட்டியலில் ரிலைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதல் நிலை பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

உலகில் உள்ள பெரும் செல்வந்தர்களில் பட்டியலை போர்பஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. அதன்படி தற்போது ஆசியாவின் முதல் நிலை கோடிஸ்வரராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் முகேஷ் அம்பானி முன்னேறியுள்ளார்.

இவர் இதற்கு முன்னாதாக முதல்நிலையில் இருந்த சீனாவின் ஹியு கா என்பவரை பின்னுக்கு தள்ளி 421 பில்லியன் டாலர்களுடன் முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடில்லி, நவ.1- குற்றவழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் முழுவதும் தடை விதிக்கவேண்டும் என பா.ஜ.க.வின் அஸ்வினி உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் தேர்தல் ஆணையமும் ஒரு மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றப் பின்னணி கொண்ட நபர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாம் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

‘குற்றப் பின்னணி உடைய நபர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள்  தடை விதிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்கி உள்ளோம். வாழ்நாள் தடை விதித்தால் அரசியல் இருந்து குற்றச்செயல்களை குறைக்க முடியும்’ என்றும்  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஹைதராபாத், அக்.10- 'ஊழல் அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள்' என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சிங்கரேணி நிலக்கரி நிறுவனத்தின் தொழிலாளர் சங்கத் தேர்தலில் டி.ஆர்.எஸ் கட்சி வென்றதை அடுத்து, வெற்றி விழாவில் டிஆர்எஸ் கட்சி தலைவரும் மாநில முதல்வருமான சந்திரசேகர் ராவ் பேசினார்.

ஊழல் அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள் என்றும் சந்திரசேகர்ராவ் ஆவேசமாக பேசினார். அவரது பேச்சு, அதிகாரிகளிடையே சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

கடந்த ஆண்டு ஒரு கூட்டத்தில் பேசிய முதல்வர் சந்திரசேகர ராவ், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கொல்வேன் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். தற்போது செருப்பால் அடியுங்கள் என்று அவர் பேசியிருப்பது பல்வேறு தரப்பினராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

சமூக வலைத் தளங்களிலும் மக்கள் இஷ்டம் போல் அவரை வாரியெடுக்கின்றனர். குறிப்பாக அரசாங்க அதிகாரிகள் மத்தியில் அவரது பேச்சு கடும் புயலைக் கிளப்பிவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒரு கூட்டத்தில் பேசிய முதல்வர் சந்திரசேகர ராவ், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கொல்வேன் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். தற்போது செருப்பால் அடியுங்கள் என்று அவர் பேசியிருப்பது பல்வேறு தரப்பினராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

சமூக வலைத் தளங்களிலும் மக்கள் இஷ்டம் போல் அவரை வாரியெடுக்கின்றனர். குறிப்பாக அரசாங்க அதிகாரிகள் மத்தியில் அவரது பேச்சு கடும் புயலைக் கிளப்பிவிட்டுள்ளது.

 

புதுடில்லி, அக்.1- டில்லி விமான நிலையத்தில் இந்து என கடப்பிதழில் குறிப்பிடப்பட்ட பெண் ஒருவர் முஸ்லீம்கள் அணியும் பர்தாவை அணிந்து வந்ததால் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

டில்லி விமான நிலையத்தில், சமீபத்தில் மும்பைக்கு செல்லும் விமானத்தில் பயணம் செய்வதற்காக, 43 வயது பெண் ஒருவர், உடலை மறைக்கும் வகையில், முஸ்லீம் பெண்கள் அணியும், பர்தா அணிந்து வந்திருந்தார்.அவருடைய பயணச்சீட்டை பரிசோதித்தபோது, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த, இந்து பெண்ணின் பெயர் இருந்தது. அந்த பெண்ணுடன், வளைகுடா நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சின் ஜட்டாவைச் சேர்ந்த முஸ்லீம் ஆணும் இருந்தார். 

இது, விமான நிலைய அதிகாரிகளுக்கு, பெரும் குழப்பமாக இருந்தது. உடனடியாக, பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. புலனாய்வு அமைப்பினரும் வரவழைக்கப்பட்டனர். அவர்களுடைய பைகளை சோதித்தபோது, அதில் சந்தேகப்படும்படியான பொருட்கள் ஏதுமில்லை. பர்தா அணிந்து வந்ததற்கான காரணத்தை, அந்த இந்து பெண் கூறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் குறித்த தகவல்களைப் பெற்று, பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டது.

 

ஹைதராபாத், செப். 28 - இந்திய விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று நொறுங்கி விழுந்து விபத்து ஏற்பட்டது. எனினும் உயிர் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் ஏதும் இல்லை.

தெலுங்கானா மாநிலத்தில் இந்திய விமான படை விமானம் ஹைதராபாத்தில் உள்ள ஹக்கிம்பேட்டை விமான பயிற்சி மையத்தில் இருந்து இன்று புறப்பட்டது. கீஸாராவில் வானில் வட்டமடிக்கும் பயிற்சிக்காக சென்றது.

அதில் விமானி உள்பட 3 பேர் பயணம் செய்தனர். காட்டு பகுதி அருகே சென்ற போது விமானத்தில் தீப்பிடித்தது. ஆபத்தை உணர்ந்த விமானி உள்பட 3 பேரும் கீழே குதித்தது உயிர் தப்பினர். இதைத் தொடர்ந்து அந்த விமானம் விழுந்து நொறுங்கியது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விமான விபத்துக்கான காரணம் தெரியவில்லை. 

கொச்சின், செப்.26- தன் முகத்தில் 10 மாதமாக 10 செண்டி மீட்டர் நீளமுள்ள புழு ஒன்று ஒளிந்து வாழ்ந்து கொண்டிருந்ததை அறிந்த ஆடவர் அதிர்ச்சிக்குள்ளானார். அதனை கேரளா மருத்துவர்கள் நேரலையில் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தனர்.

கேரளா, கொச்சினில் உள்ள கே.ஐ.எம்.எஸ் மருத்துவமனையில் கடந்த 20ஆம் தேதி இந்த அறுவை சிகிச்சை நடந்துள்ளது. சிகிச்சை அளித்த மருத்துவர் சூஹைல் கூறுகையில், சம்பந்தப்பட்ட 29 வயது நபர், முகத்தில் திடீரென வீக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறி மருத்துவம் பெற வந்தார். 

அவரைப் பரிசோதித்த பிறகு ஸ்கேன் செய்து பார்க்கையில் அவரின் முகத்தில் புழு போன்று இருந்ததைக் கண்டோம் என்றார்.

"நோயாளியிடம் இதனைப் பற்றி கேட்டப்போது பத்து மாதங்களுக்கு முன்னர் தன் இடது கண் ஓரத்தில் புழு ஒன்று இருந்ததாகவும் அது நெளிந்து செல்வதைக் கண்டு மருத்துவரிடம் செல்ல அவர் மருந்து கொடுத்து அனுப்பிவிட்டதாக கூறினார்" என சூஹைல் கூறினார்.

முந்தைய மருத்துவரால் கொடுக்கப்பட்ட மருத்தினால் அந்த புழு சாகவில்லை. மாறாக கடந்த 10 மாதமாக நோயாளியில் முகத்திலேயே உயிரோடு வாழ்ந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தப்போது அந்த புழு 10 செண்டி மீட்டர் நீளமிருந்ததைக் கண்டு தாம் அதிர்ச்சி அடைந்ததாக மருத்துவர் சூஹைல் தெரிவித்தார்.

வெளியே எடுக்கப்பட்ட புழுவைப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் முடிவு வந்த பிறகு தான் புழு முகத்தில் வந்ததற்கான காரணம் தெரியவரும் என்று அவர் மேலும் கூறினார். 

More Articles ...