டிரக் மாறி ஓடிய சென்னை இரயில்; உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அலறிய பயணிகள்!

தமிழகம்
Typography

சென்னை, மே 18- இன்னும் சிறிது நேரத்தில் அடுத்த நிலையத்தைத் தொட்டு விடலாம் என்று காத்திருக்க, செல்ல வேண்டிய பாதையில் செல்லாமல் எதிர்திசை வழித்தடத்தில் ரயில் ஓடியதால் நூற்றுக்கணக்கான பயணிகள் ஒருகணம் திக்குமுக்காடி போயினர் சென்னையில்.

சென்னை சென்ட்ரலிலிருந்து அரக்கோணத்திற்கு மாலை 7 மணியளவில் விரைவு மின்சார ரயில் ஒன்று வழக்கம் போல புறப்பட்டது. வேலை முடியும் நேரம் என்பதால் ரயில் பயணிகள் அதிகம் இருந்தனர். இந்நிலையில், அடுத்த நிலையமான பேசின்பாலத்துக்கு ரயில் சென்றபோது அரக்கோணம் நோக்கி செல்லும் 1வது தணடவாளத்தில் செல்லாமல் கும்மிடிப்பூண்டி நோக்கி வரும் தண்டவாளப் பாதையில் ரயில் சென்றது. 

இதைக் கண்ட மக்கள் பீதி அடைந்து கதறினர். ரயில் பாதை மாறி போவதை அறிந்தும் சமிக்ஞை அந்த பக்கமாக விழுந்ததால் வேறு வழியின்றி ஓட்டுனரும் ரயிலை இயக்கினார். நிலையத்தில் ரயில் நின்றதும் பயணிகள் அலறியடித்து கீழே இறங்கி ஓடினர்.

நல்லவேளையாக எதிர்புறம் எந்த ரயிலும் வராததால் விபத்து ஏதும் நடக்கவில்லை. அப்பாதையைப் பயன்படுத்தும் மற்ற இரயில்கள் முந்தைய நிலையங்களிலேயே நிறுத்தப்பட்டன. பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அரக்கோணம் செல்ல இரயில் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு பின்னர் பயணிகள் அதில் ஏறி புறப்பட்டனர். 

BLOG COMMENTS POWERED BY DISQUS