கைதாவதை தவிர்க்க தினகரன் தலைமறைவு? 

தமிழகம்
Typography

சென்னை, ஏப்ரல்.18- தேர்தல் ஆணையத்திற்கே லஞ்சம் கொடுக்க முயன்ற ஊழல் குற்றச்சாட்டின் பேரில் டில்லி போலீசாரால் கைது செய்யப்படும் அபாயத்தில் இருக்கும் டிடிவி தினகரன் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தை தம்முடைய தரப்புக்கு ஒதுக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையத்திற்கு 50 கோடி ரூபாய் வரையில் லஞ்சம் கொடுக்க டிடிவி தினகரன் முயன்றுள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பில் இடைத் தரகரான சுகேஷ் சந்திரா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரன் கைது செய்யப்படவிருக்கிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத குற்றப் பிரிவில் டில்லி போலீசார் வழக்கை பதிவு செய்வதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து தினகரன் தலைமறைவாகி இருக்கிறார். இதற்கு முன்பதாக சசிகலாவைச் சந்திக்க தினகரன் பெங்களூரு சிறைச்சாலைக்குச் சென்றதாகவும் ஆனால் தினகரனைச் சந்திக்க சசிகலா மறுத்து விட்டதாகவும் கூறப்பட்டது. 

அங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் ஒருநள் தங்கியிருந்த தினகரன், அதன் பின்னர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. கட்சி நிர்வாகிகள் வழக்கமாகத் தொடர்பு கொள்ளும் தொலைபேசிகள் மூலம் அவருடன் பேச இயலாமல் திணறிப் போயுள்ளனர். 

கைதாகும் நடவடிக்கைகளில் இருந்து தற்காலிகமாக தப்பும் நோக்கில் அவர் தலைமறைவாகி இருக்கிறார் எனக் கருதப்படுகிறது. தனக்கு எதிரான போலீஸ் நடவடிக்கைகளை சட்ட ரீதியில் முறியடிப்பதற்கான வியூகங்கள் குறித்து இரகசிய இடத்தில் அவர் ஆலோசனை நடத்தக்கூடிய வாய்ப்பும் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS