'அம்மா' உடல் தோண்டி எடுக்கப்படுமா? நீதிபதியின் கருத்தால் புதிய சர்ச்சை!

தமிழகம்
Typography

சென்னை, டிசம்.29- மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் தமக்கும் சந்தேகம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதோடு ஜெயலலிதாவின் உடல் தோண்டி எடுக்கப்படுமா? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஜோன்ஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, உயர்நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வு நீதிபதிகளான வைத்தியநாதன் மற்றும், பார்த்திபன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோது ஜெயலலிதா, மருத்துவமனையில் இருந்தபோது படம், வீடியோ என எதுவுமே வெளியாகாததைச் சுட்டிக்காட்டி தமக்கும் சந்தேகம் இருப்பதாக நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்தார். 

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ள நிலையில், நானே தொடர்ந்து வழக்கை விசாரிக்கும் நிலை இருந்திருந்தால், ஜெயலலிதாவின் உடற்கூறு சோதனைக்கு உத்தரவிட்டிருப்பேன் என்ற கருத்தை அவர் கூறியிருந்தார். இந்த வழக்கு ஜனவரி 9ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரும் போது வேறு நீதிபதிகள் குழு வழக்கை விசாரிக்கும். 

நீதிபதி வைத்தியநாதனை போன்ற மனநிலையில் அடுத்துவரும் நீதிபதிகள் குழுவும் இருக்குமேயானால், ஜெயலலிதாவின் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வாய்ப்பு இருப்பதாக சட்டத்துறை வட்டாரங்கள் கருதுகின்றன.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் சந்தேகம் தெரிவித்து வருகிறார்கள். ஊடகங்களிலும் செய்திகள் வருகின்றன. அதிமுக விசுவாசியாக இருந்த கராத்தே ஹுசைனியும், ஜெயலலிதா கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். எனவே ஜெயலலிதா உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிடப்படுமானால், சமாதியிலிருந்து அவரது உடல் வெளியே எடுக்கப்பட வேண்டிய தேவை ஏற்படும்.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS