சசிகலா-அஜித் சந்திப்பா? திடீர் பரபரப்பு!  என்ன நடக்கிறது? குழப்பத்தில் ரசிகர்கள்!

தமிழகம்
Typography

சென்னை, டிசம்.27- என்ன நடந்தது 'தல' அஜித்திற்கு? அவரது ரசிகர்களும் தமிழக மக்களும் குழம்பிப் போயுள்ளனர். நேற்றிரவு போயஸ் கார்டனில் 'சின்னம்மா' சசிகலாவை அஜித் நேரில் சந்தித்து பேசியதாக வெளியான தகவலின் எதிரொலி தான் இத்தகைய குழப்பத்திற்கு காரணம்...!

ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை நடிகர் அஜித் நேற்று இரவு போயஸ் இல்லத்தில் சந்தித்துப் பேசியதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்திய அதேவேளையில் அது குறித்த மாறுபட்ட தகவல்களும் கிளம்பியுள்ளன.

இதுவரையில் பொது நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்காமல் ஒதுங்கியே இருப்பவர் நடிகர் அஜித். புதிய திரைப்படத்தில் நடித்து வரும் அஜித், பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்த நிலையில், ஜெயலலிதா மறைந்ததும், சென்னை திரும்பி அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில், அஜித் நேற்று இரவு போயஸ் இல்லம் சென்று சசிகலாவை சந்தித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் அதிமுக மற்றும் அஜித் ரசிகர்கள் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 

இந்தச் சந்திப்பை, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில இணை செயலாளர் ஒரு 'டிவிட்'டில் உறுதி செய்தார். அதேநேரம், அஜித், சசிகலாவை சந்தித்தது குறித்த எந்தப் புகைப்படமும், வீடியோவும் வெளியாகாதது சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது. 

அதிமுகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்திலும் அஜித் சந்திப்பு குறித்த செய்தி எதுவும் வெளியாகவில்லை. நேற்று இரவு திரையுலகிலிருந்து சசிகலாவை சந்தித்த ஒரே நபர் நடிகை ஸ்ரீதேவி மட்டும்தான் என்று போயஸ் கார்டன் வட்டாரங்கள் அடித்துச் சொல்கின்றன. 

அதிமுக பொதுக்குழு-செயற்குழு கூட்டம் வரும் 29 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. அதில் சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது.

இதனிடையே சசிகலாவுக்கு ஆங்காங்கு எதிர்ப்புகள் நிலவுவதையும் அதிமுக கவனித்து வருகிறது. எனவே அஜித் போன்ற ஒரு பிரபலத்தின் ஆதரவு சசிகலாவுக்கு இருப்பதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்த, அதிமுக தகவல் தொடர்பு பிரிவில் சிலர் செய்த மாய்மாலம்தான் இந்த வதந்தி எனத் தகவல்கள் கூறுகின்றன. 

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிமுக அல்லது அஜித் தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட வேண்டும். ஏற்கனவே அஜித்தான் அதிமுகவின் சார்பில் முக்கிய பொறுப்பை ஏற்கப்போகிறார் என கேரளா, கர்நாடகா மாநில தொலைக்காட்சி சேனல்கள் செய்திகலை பரப்பிவரும் நிலையில், இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க அஜித்தினால் மட்டுமே முடியும் என்கின்றன ஊடகங்கள்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS