'ஓய்வு பெற நினைக்கிறேன்": கருணாநிதி உருக்கம், தொண்டர்கள் அதிர்ச்சி

தமிழகம்
Typography

தஞ்சாவூர், ஏப்ரல் 27-  "10 வயதிலிருந்து அரசியல் பணி ஆற்றுகிறேன். ஓய்வு  இல்லாமல் உழைத்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு ஓய்வு தேவைப் படுகிறது.  அந்த ஓய்வை நீங்கள் தருவீர்கள்  என்ற  நம்பிக்கை உள்ளது என தி.மு.க தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். 

"நாட்டைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் கையில் ஆட்சி சிக்கியுள்ளது. இந்த ஆட்சியிலிருந்து மீட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும். என் மக்களைக் காப்பாற்ற வேண்டும்" என தஞ்சாவூரில் திலகர் திடலில்  நடைபெற்ற  பிரச்சாரத்தில் கருணாநிதி இவ்வாறு தெரிவித்தார். 

"தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம்,  வெற்றி பெற்றால் வீராப்பு காட்டுவதும், தோல்வி அடைந்தால் முகத்தைக் கீழே தொங்கப் போடுவதும் அரசியல்வாதிகளுக்கு அழகல்ல. தி.மு.க-வை நடத்திச் செல்கின்ற  பெரும்  பொறுப்பு வாய்ந்த பேரியக்கமாக நான் கருதுகிறேன்.

அதற்கு யாராவது ஊறு விளைவித்தால் அவர்களை நான் சும்மா விடமாட்டேன். பேசுபவர்களின் கருத்துகளை எதிர்த்து எழுத்துக்கு எழுத்து, பேச்சுக்கு பேச்சு என்று  அந்த நாள் முதல் இந்த நாள் வரை போராடுகிறேன்.   அண்ணாவின்  தம்பிகளான எங்களை யாரும் வீழ்த்த முடியாது. கடைசி மூச்சு இருக்கும் வரை இயக்கத்திற்காக பாடுபடுவேன். இங்கு இளைஞர்களைப் பார்க்கிறேன். இளைஞர்கள் தான் இந்த சமுதாயத்தின் ஆணி வேர்கள்.

அவர்களால் தான் இந்த உலகத்தில் பல புரட்சிகள் நடைபெற்றன. இளைஞர்கள் தான்  நாட்டை ஆளக்கூடியவர்கள். என்னால் நடக்கக்கூட முடியவில்லை. அப்படி இருந்தாலும் என் கூட நீங்கள் காட்டுகிற உணர்வு, என் உள்ளத்தில் உள்ள அன்பு, ஆர்வம் இவைகளுக்கு ஈடு இணை கிடையாது. இவைகளையெல்லாம் பொக்கிஷமாக கருதுகிறேன்.

நாம் அனைவரும் ஒரே குறிக்கோளோடு வாழ வேண்டும். வேண்டும். நாம்தான் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும். எனவே எந்த தியாகத்துக்கும் தயாராகுங்கள். நான் உங்களை கேட்டுக்கொள்வது. நாம் எதற்கும் தயார், எதற்கும் ஈடுகொடுப்போம் என்ற சபதத்தை ஏற்று பணியாற்ற வேண்டும்.

என்னைப்பொறுத்தவரை எனக்கு 92 வயதாகிறது. 10 வயது தொடங்கி அரசியல் பணிஆற்றுகிறேன். ஓய்வு இல்லாமல் உழைத்து கொண்டிருக் கிறேன். அந்த ஓய்வை விரும்புகிறேன். நீங்கள் தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த ஓய்வு ஒன்று தான் நான் பட்டபாட்டுக்கு, நான் உழைத்த உழைப்புக்கு, நான் அடைந்த பயன் என்பதை உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்" என  கருணாநிதி  பேசினார். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS