யானைக் குட்டியை காப்பாற்ற தோளில் தூக்கிக் கொண்டு ஓடிய காவலாளி சரத் குமார்! பரபரப்பு -video

தமிழகம்
Typography
சென்னை, டிசம். 29- தாயைப் பிரிந்து குறுகிய கால்வாயிக்குள் விழுந்து கிடந்த யானைக் குட்டியை வனத்துறை காவலாளி ஒருவர், வெளியே மீட்டெடுத்து, நடக்க முடியாமல் தவித்த அந்தக் குட்டியை, ஒரே மூச்சில் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு வந்து, அதன் தாயிடம் சேர்க்க உதவிய காணொளி சமூக வலைத் தளத்தில் மக்களின் ஒருமித்த பாராட்டினைப் பெற்றிருக்கிறது.

## source: youtube

"அவ்வளவு கனமான யானைக் குட்டியை, எப்படி தோளில் தூக்கிக் கொண்டு  அவரால் ஓட முடிந்தது? என்பதுதான் பலருடைய  கேள்வி. இரவு வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது சரத் குமார் பழனிச்சாமி என்ற 28 வயதுடைய அந்தக் காவலாளிக்கு அவசர அழைப்பு வந்தது. 
 ஊட்டி, மேட்டுப் பாளையம் அருகே உள்ள வன விலங்கு முகாமில் சரத் குமார் பணிபுரிந்து வருகிறார். பெண் யானை ஒன்று வனபத்ரா காளியம்மன் கோயிலுக்கு அருகில் சாலையை மறித்துக் கொண்டு ஆவேசமாகப் பிளிறிக் கொண்டிருப்பதாக அவருக்கு தகவல் வந்தது. 

உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்த சரத் குமார், கிராமத்தினர் சிலரது உதவியுடன் பட்டாசுகளைப் பயன்படுத்தி அந்த யானையை அங்கிருந்து விரட்டினார்.
அதன் பின்னர் அந்தப் பெண் யானையின் பிளிறல், குட்டியை இழந்து தவிப்பதை போன்று இருப்பதை உணர்ந்த சரத் குமார், தமது நண்பர்களுடன் சேர்ந்து அந்தப் பகுதியில் தேடத் தொடங்கினார்.
கடைசியில், அங்கிருந்த கால்வாய்க்குள்  குட்டி யானை ஒன்று விழுந்து கிடந்ததோடு அது வெளியே வர முடியாத படி  தடுப்புக் கல் பலகை ஒன்று மறைத்துக் கொண்டிருந்தைக் கண்டார். பின்னர் வனத்துறை அதிகாரிகளுக்கும் சரத் குமார் தகவல் தந்தார்.  கடுமையான போராட்டத்திற்குப் பின்னர் அந்த யானைக் குட்டி வெளியே கொண்டு வரப்பட்டது.  
மிகவும் பலவீனமாக காணப்பட்ட அந்தக் குட்டியை, அப்பகுதியில்  தேடிக்கொண்டு அலையும் தாய் யானையிடம் சேர்க்க வேண்டிய நிலையில், நடக்கத் தடுமாறிக் கொண்டிருந்த யானைக் குட்டியை  அசுர வேகத்தில் தூக்கி தோளில் தூக்கிக் கொண்டு 50 மீட்டர் தூரம் ஓடினார் சரத் குமார்.
அங்கிருந்து ஒரு தண்ணீர் சுனை அருகில்  அந்தக் குட்டி, தாய் யானையின் கண்களில் படும் வகையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இறக்கி விட்டார். 
தாய் யானையும் அதன் குட்டியும் மீண்டும் ஒன்று சேர்ந்து விட்டன என்பதை மறு நாளில் அவர் உறுதிப்படுத்திக் கொண்டார்.

குட்டியை யானை குறிப்பிட்ட இடத்தில் விட்டு விட்டு, தாய் யானை வரும் வரையில் அங்கே நாங்கள் காத்திருக்க முடியாது. தாய் யானை, குட்டியை  இழந்த ஆவேசத்தில் இருப்பதால் எங்களைக் கண்டிப்பாக தாக்கி விடும். எனவே குறிப்பிட்ட இடத்தில் குட்டியை விட்டு விட்டு வந்தோம்  என்றார் அவர். 
"மறு நாள் சென்று பார்த்தேன். குட்டியும் தாயும் ஒன்று சேர்ந்து விட்டன என்பதற்கான தடயம் இருந்தது. ஒரு பெரிய யானையின் காலடித் தடத்திற்கு இடையில் ஒரு குட்டி யானையின் காலடித் தடம் பதிந்தவாறு சென்றிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்" என்று சரத் குமார் விவரித்தார்.
இந்தப் போராட்டத்தின் போது சரத் குமாருக்கு அவருடைய நண்பர்களும் உதவினர். "முதலில் நானும் எனது நான்கு நண்பர்களும் சேர்ந்து தான் குட்டியைத் தூக்கப் பார்த்தோம். முயற்சியும் பண்ணினோம். ஆனால் அது குட்டிக்கு ஆபத்தாக முடியும் போல இருந்தது. அது ஏற்கெனவே பலமிழந்து, பயத்தில் தவித்துக் கொண்டிருந்தது" என்று சரத் குமார் சொன்னார்.
பிறகு  யானைக் குட்டியை  தூக்கி தன் தோளில் வைத்துக் கொண்டு சரத் குமார் ஓடிய காட்சியை அங்கிருந்த சிலர் பதிவு செய்தனர். அது,  சமூக வலைத் தளங்களில் பரவியது.  அவரது முயற்சியை மக்கள் பாராட்டிய வண்ணம் உள்ளனர். 
இது பற்றிக் கருத்துரைத்த சரத் குமார், "நிறைய பேர்  என்னுடன் தொடர்பு பாராட்டுகிறார்கள்.  எல்லோருமே, எப்படி யானைக் குட்டியை உன்னாலே  தூக்க முடிந்தது என்று தான் கேட்கிறார்கள். என்னுடைய கிராமத்து மக்கள் இதைத் தான் கேட்கிறார்கள்" என்றார்.
"எனக்கு, அந்தக் கணத்திலே, ஏற்பட்ட ஆவேசத்திலே தூக்கிட்டேன். ஆனாலும் செம கனம் அந்தக் குட்டி.., எனக்கு மூச்சே திணறிப்போச்சு..'' என்கிறார் சரத் குமார்.
BLOG COMMENTS POWERED BY DISQUS