மலேசிய மணல் தமிழகத்தில் விற்பனை: உயர்நீதிமன்றம் அனுமதி! 

தமிழகம்
Typography

 

மதுரை, நவ.29-  மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனை செய்ய அனுமதி வழங்க கோரி புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் எம்.ஆர்.எம். ராமையா எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் ராமையா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.  

"வெளிநாடுகளிலிருந்து மணல் இறக்குமதி செய்ய மத்திய அரசிடம் உரிமம் பெற்றோம். அதன்பேரில், மலேசியாவில் இருந்து 53,334 மெட்ரிக் டன் மணல் இறக்குமதி செய்தோம். மொத்த மணலும் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

இதற்காக பொருள் சேவை வரியாக ரூ. 38,39,347 செலுத்தி உள்ளோம். ஆனால், தமிழகத்தில் அரசு நேரடியாக மணல் விற்பனையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், தனியார்கள் மணல் விற்பனை செய்வதற்கு தமிழக கனிம வள சட்டப்படி அனுமதி பெற வேண்டும் என்று வருவாய் அதிகாரிகள் கூறுகின்றனர்.

 மேலும் துறைமுகத்தில் இருந்து மணலை வெளியே எடுத்துச் செல்வதற்கும் அனுமதி மறுத்துள்ளனர்" என்று ராமையா கூறினார்.

"வெளிநாட்டிலிருந்து மணல் இறக்குமதி செய்து அதனை விற்பனை ஈடுபடுத்துவது குறித்து  மத்திய அரசுதான் முடிவெடுக்கும். இதில் மாநில அரசு அதிகாரிகள் தலையிட முடியாது. 

எனவே மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை வாடிக்கையாளர்களுக்கு வழங்க அனுமதி வழங்கவும், பறிமுதல் செய்த 6 லாரிகளையும் அதில் இருந்த மணலையும் திரும்ப ஒப்படைக்கவும் உத்தரவிட வேண்டும்’ என்று அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பதற்கு தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள், வழிகாட்டுதல்கள் குறித்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு அந்த வழக்கை ஒத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி துறைமுகத்தில் முடங்கி கிடக்கும் மலேசிய மணலை எடுத்து செல்ல ராமையாவுக்கு இன்று அனுமதி வழங்கப்படுகிறது என்று நீதிமன்றம் கூறியது. 

மேலும், வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்ய தமிழக அரசு உரிம அனுமதியை அவருக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

“தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்திற்குள் மூட வேண்டும். புதிதாக மணல் குவாரிகளை திறக்க அனுமதிக்க கூடாது.  சட்டவிரோதமாக மணல் எடுத்து செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 இறக்குமதி செய்த மணல் மூலம் தமிழகத்தின் மணல் தேவையை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். மேலும் மணல் இறக்குமதி  குறித்து முறையான விதிமுறைகளை தமிழக அரசு வகுக்க வேண்டும்’ என்றும்  நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. 

மக்கள் நலன், இயற்கை வளம், விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS