ஜெயலலிதாவின் 'மகளா?' அம்ருதாவின் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

தமிழகம்
Typography

 

புதுடில்லி, நவ.27-  மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று தன்னை அறிவிக்கக் கோரி பெங்களூரில் ஒரு பெண் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மாறாக, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அந்த மனுவை அவர் தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தியது.  

ஜெயலலிதாவின் வாரிசுகள் என அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அவரின் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் உரிமை கொண்டாடி வரும் வேளையில், பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்கின்ற அம்ருதாவும் (வயது 38) தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள் என்று கூறியுள்ளார். 

ஜெயலலிதா தன் சொந்த தாய் என கூறி பரபரப்பை ஏற்படுத்திய அம்ருதா, இந்திய அதிபர், பிரதமர் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தார். 

மேலும், தன்னை ஜெயலலிதாவின் மகள் என்று அறிவிக்கக் கோரி, அவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஜெயலலிதா தன் தாய்தான் என்பதை நிரூபிக்க மறைந்த ஜெயல்லிதா மீது மரபணு பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். 

"1980-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி ஜெயலலிதாவின் மகளாக நான் பிறந்தேன். என்னை பெங்களூரில் உள்ள ஜெயலலிதாவின் மூத்த சகோதரி சைலஜா-சாரதி தம்பதியினரிடம் ஒப்படைத்து வளர்க்க செய்தனர். நான் சைலஜாவின் மகளாக வளர்ந்தேன்.

 "எனக்கு அப்போது ஜெயலலிதா எனது தாயார் என்பது தெரியாது. 1996-ஆம் ஆண்டு சைலஜா என்னிடம் ஜெயலலிதாவை சென்று சந்திக்க வேண்டும் என்று கூறினார். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நான் ஜெயலலிதாவை சந்தித்தேன்.

அப்போது அவர் என்னை கட்டி அணைத்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். ஆனால், நான்தான் உன் தாயார் என்று அவர் என்னிடம் கூறவில்லை. பின்னர் பெங்களூர் திரும்பினேன். அதன் பிறகு பலமுறை அவரை நான் நேரில் சந்தித்தேன்." 

"என் வளர்ப்பு தாய் சைலஜா 2015-இல் இறந்துவிட்டார். வளர்ப்பு தந்தை சாரதி இந்த ஆண்டு மார்ச் 20-ஆம் தேதி இறந்துவிட்டார். ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் என்பதால் அவர் என் தாய் என்ற உண்மை வெளிப்படுத்தப்படவில்லை. 

ஜெயலலிதாதான் என் தாய் என்பதை நிரூபிக்க, மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அவரது உடலை தோண்டி எடுத்து டி.என்.ஏ பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும். வைஷ்ணவ ஐயங்கார் பிராமண முறைப்படி ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்கு நடத்த உத்தரவிட வேண்டும்’ என்றும் அம்ருதா தனது மனுவில் கூறியிருந்தார். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS