ஒன்றாக சாகுவோம் என்றான்; காதலி மீது தீப்பற்றியதும் தப்பி ஓடினான்! காதலன் கைது!

தமிழகம்
Typography

சென்னை, நவ.13- கோயம்புத்தூர் மாவட்டத்தில் காதலியை அவரது காதலன் எரித்துக்கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். ஜான்சிபிரியா (வயது 17) என்ற பள்ளி மாணவியும், செல்வகுமார் (வயது 22) என்ற விசைத்தறி தொழிலாளியும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டார் பெற்றோரும் இருவரையும் கண்டித்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் ஜான்சிபிரியா மட்டும் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த காதலன் செல்வகுமார், நாம் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்வோம் என்று வீட்டில் தூக்கு கயிற்றை கட்டினார்.

அவரிடம், தூக்குப்போட்டால் கழுத்து இறுகி செத்து விடுவது பயமாக இருக்கிறது என்று ஜான்சிபிரியா கூறி இருக்கிறார். இதைதொடர்ந்து மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று செல்வகுமார் கூறி உள்ளார். முதலில் மண்எண்ணெயை ஊற்றி ஜான்சிபிரியா மீது தீவைப்பது என்றும், எரியும் தீயில் இருவரும் கட்டிப்பிடித்துக் கொள்ளலாம் எனவும் செல்வகுமார் கூறியுள்ளார். இதை ஜான்சிபிரியா ஏற்றுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து ஜான்சிபிரியா மீது செல்வகுமார் மண்எண்ணெயை ஊற்றினார். பின்னர் தீக்குச்சியை பற்ற வைத்து அவர் மீது வீசினார். இதில் கண் இமைக்கும் நேரத்தில் ஜான்சிபிரியாவின் உடலில் தீப்பற்றி மளமளவென்று பரவி எரிந்தது. இதனால் வலியால் அலறித்துடித்தபடி அவர் காதலனை நோக்கி ஓடிவந்தார். அதைப் பார்த்து பதறிப்போன செல்வகுமார் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இதற்கிடையே தீ உடலில் பற்றியதால் ஜான்சிபிரியா அலறியுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்துவந்து தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். காதலியை உயிருடன் எரித்துக் கொன்ற செல்வகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS