சசிகலா உறவினர்கள், உடமைகள் என 190 இடங்களில்  திடீர்ச் சோதனை!

தமிழகம்
Typography

சென்னை, நவ.9- சசிகலாவின் உறவினர்களான விவேக், திவாகரன் ஆகியோர் வீடுகள் உள்பட 190 இடங்களில் வருமான வரித் துறையினர் அதிரடிச் சோதனை நடத்தி வருகின்றனர். ஜெயா டி.வி முதல், ஜெயலலிதாவின் கொடநாடு பங்கள வரையில் ஒரே சமயத்தில் இந்தச் சோதனைகள் நடப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது.

வரி ஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து வருமான வரித் துறை அதிகாரிகள் குழுவினர் சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஜெயா டிவி சி.இ.ஓ விவேக் ஜெயராமன், தி.நகரில் உள்ள இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா வீடு, ஜாஸ் சினிமாஸ், 'நமது எம்.ஜி.ஆர்' பத்திரிகை அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடத்தி வருகின்றனர். 

இதேபோல் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. மன்னார்குடி அருகே சுந்தரகோட்டையில் திவாகரனுக்கு சொந்தமான செங்கமலத்தாயார் கல்லூரியிலும், அதன் ஊழியர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது.

தஞ்சாவூரில் சசிகலா அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேசன் வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. சசிகலாவின் தம்பி வினோதகனின் மகன் மகாதேவன் வீட்டில் ஐடி சோதனை நடைபெறுகிறது. மகாதேவன் உடல்நலக் குறைவால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலமானார்.

கூடலூரில் உள்ள சசிகலாவின் ஆதரவாளர் சஜீவன் வீட்டிலும் அவரது மர மில்களிலும் சோதனை நடைபெறுகிறது. சசிகலா உறவினர்கள், ஆதரவாளர்களுக்கு சொந்தமான சென்னை, பெங்களூர், தஞ்சாவூர், மன்னார்குடி, கோடநாடு, கூடலூர் உள்பட 190 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.  

 

BLOG COMMENTS POWERED BY DISQUS