குடிபோதையில் காரை ஓட்டி விபத்து: நடிகர் ஜெய் கைதாகி விடுதலை!

தமிழகம்
Typography

 சென்னை, செப்.22- குடிபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை உண்டாக்கியதாக நடிகர் ஜெய் கைதாகி, பின்னர் விடுதலை செய்யப்பட்டார். அவரது கார் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நடிகர் ஜெய் நேற்றிரவு தனது நண்பர்களுடன் இரவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர், தனது சொகுசு காரில் வீட்டுக்குச் செல்லும் போது அடையாரில் உள்ள மலர் மருத்துவமனையில் அருகே, பாலத்திற்குக் கீழே  தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானது.

கார் மோதிய அதிர்ச்சியில் நடிகர் ஜெய்யும், நடிகரான அவரது நண்பரும் காருக்குள்ளேயே மயக்கத்தில் கிடந்துள்ளனர். இதைப் பார்த்த பொதுமக்கள் அடையாறு போக்குவரத்துப் புலனாய்வு போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

போக்குவரத்துப் போலீசார் வரைந்து வந்து காருக்குள் மயங்கி கிடந்த நடிகர் ஜெய்யையும், அவரது நண்பரான இன்னொரு நடிகரையும் மீட்டனர்.

அவர்களை போலீசார் அடையாறு போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். காருக்கு மட்டும் முன்பகுதியில் சேதம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் காயமின்றித் தப்பிவிட்டனர். 

போதை தெளிந்த பிறகு அவர்களிடம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தினர். குடிபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை உண்டாக்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் ஜெய் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும், அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS